முதல்வரின் சில நிமிட பிரச்சாரத்திற்காக.. சிரமத்தை சந்திக்கும் சாமானிய மக்கள்.. சாடிய அண்ணாமலை!

  • கோவை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் விஜய் நாளை வருவதால் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதல்வரின் பாதுகாப்பு என்ற பெயரில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ள அண்ணாமலை, முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காக மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. தவெக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா களமிறக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மதுராந்தகம் பிரச்சாரத்தை விஜய் முடித்துவிட்ட நிலையில், தற்போது தாராபுரம் தொகுதியில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

    Advertisement

    வழக்கம் போல் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக தலைமை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் முதல்வர் விஜய்யின் வருகை காரணமாக கோவை, அவிநாசி மற்றும் தாராபுரம் என்று பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் விஜய் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

    மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?

    Advertisement

    மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    English Summary

    Annamalai: Annamalai Slams Traffic Diversions in Dharapuram Ahead of CM Vijay Bypoll Campaign