யாருக்கும் வஞ்சகமில்லாமல்.. அண்ணாமலையின் ‘அரவணைப்பு அரசியல்’.. இது புதுசா இருக்குங்க! ஜெயிக்குமா?

  • சென்னை: பாஜகவில் இருந்து விலகி தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை. அவர் தான் தொடங்கிய தனது "வி தி லீடர்ஸ்" (இது நம்ம இயக்கம்) அமைப்பின் முதல் மாநில மாநாட்டை பொள்ளாச்சி அருகே பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். "போதையில்லா தமிழகம் - விழிப்புணர்வு மாநாடு" என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்குப் பதிலாக தனது அரசியல் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளது. இதன் மூலம், தமிழக அரசியலில் தனக்கென ஒரு புதிய பாணியை உருவாக்குகிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    Advertisement

    தமிழகத்தின் கரூரில் பிறந்து, ஐஐஎம்-ல் படித்து கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, விருப்ப ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். இணைந்த உடனேயே அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    Advertisement

    பின்னர் குறுகிய இடைவெளியிலேயே 2021-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை. சட்டம்-ஒழுங்கு, ஊழல், அரசு நிர்வாகம் போன்ற பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

    அண்ணாமலை

    இதற்கிடையே அதிமுகவையும் சேர்த்து அவர் விமர்சிக்க, அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கினார் அண்ணாமலை. ஆனால் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை உருவாக்கிய நிலையில் அண்ணாமலை பதவி விலக நேரிட்டது. இதை அடுத்து கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் அண்ணாமலை என்ற பேச்சுகள் எழுந்தன.

    Advertisement

    வி தி லீடர்ஸ்

    இதற்கிடையே டெல்லி சென்ற அண்ணாமலை கடந்த ஜூன் 5-ம் தேதி பாஜகவிலிருந்து விலகினார். அதே நாளில் "வி தி லீடர்ஸ்" (இது நம்ம இயக்கம்) அமைப்பை தொடங்கிய அவர் உறுப்பினர் சேர்க்கையையும் ஆரம்பித்தார். அந்த அமைப்பு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து தற்போது சுமார் 20 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    அரசியல் கட்சி

    அதுமட்டுமல்லாமல் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல அடிநிலைத் தொண்டர்களும் அண்ணாமலையுடன் இணைந்து வருகின்றனர். 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அரசியல் கட்சியை அறிவிப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த அண்ணாமலை, அதற்கு முன்பாகவே நேற்று தனது அமைப்பின் முதல் மாநாட்டை நடத்தினார். ஆனால் அந்த மாநாடு முழுக்க அரசியல் மட்டுமே நிரம்பியதாக இல்லாமல், சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டதாக இருந்தது.

    Advertisement

    முதல்வர் விஜய்

    மாநாட்டில் பேசிய அண்ணாமலை, "இது அரசியல் எதிரிகளை விமர்சிக்க நடத்தப்படும் மாநாடு அல்ல. யாரையும் குறை கூறுவதற்காக நாம் கூடவில்லை. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம்" என்று கூறினார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசையும் அவர் நேரடியாக விமர்சிக்கவில்லை. புதிய அமைச்சர்கள் என்பதால் ஆரம்பத்தில் தடுமாறுவது இயல்புதான் என்றும், அவர்களை குறை கூறுவதை விட நல்ல ஆலோசனைகளை வழங்குவது தான் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை என்றும் குறிப்பிட்டார்.

    மக்களின் நலன்

    அதே நேரத்தில், மதுபானக் கடைகள் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்த அவர், கோயில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடியதாக அரசு தெரிவித்தாலும், பல இடங்களில் இன்னும் விதிமுறைகள் மீறப்படுவதாக தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறிய அவர், அந்த கடைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வெறுப்பை மையமாகக் கொண்ட அரசியல் வேண்டாம், மக்களின் நலனை மையமாகக் கொண்ட அரசியல்தான் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    Advertisement

    பாஜக - திமுக

    திமுக ஆட்சியை மட்டும் விமர்சித்த அண்ணாமலை, அதிகாரத்தில் இருந்தபோது ஆணவ அரசியலை முன்னெடுத்ததன் விளைவாகவே மக்கள் அந்த ஆட்சியை நிராகரித்ததாக கூறினார். ஆனால் பாஜக குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், "எங்கள் அமைப்பில் பாஜக மட்டுமல்ல, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் உள்ளனர். ஒரு கட்சியை விட்டு வெளியேறும்போது அந்தக் கட்சியை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. கருத்து வேறுபாடு இருந்தாலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.

    Advertisement

    சம வாய்ப்பு

    தனது அரசியல் கொள்கை குறித்தும் தெளிவாக பேசிய அண்ணாமலை, "இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதே நேரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக உயர வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. மதமும், ஜாதியும் இந்த இயக்கத்தில் அரசியலுக்கான அடிப்படையாக இருக்காது. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    போதைப்பொருள் ஒழிப்பு

    அடுத்த ஆறு மாதங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தப் போவதாகவும், அரசியலில் ஆர்வமுள்ள சாதாரண இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தலைவர்களாக உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் அண்ணாமலை கூறினார்.

    அரசியல் பயிற்சி மையம்

    அதற்காக கோவையில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். இனி உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை தனது இயக்கத்தின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார். இந்த அணுகுமுறையைத்தான் அரசியல் விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

    அரவணைப்பு அரசியல்

    தவெக தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டிலேயே அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளை வெளிப்படையாக அறிவித்த நிலையில், அண்ணாமலை யாரையும் குறிவைத்து தாக்காமல், "அரவணைப்பு அரசியல்" என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்ற கருத்து நிலவுகிறது. 2031-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு பயணிப்பதாக அறிவித்துள்ள அண்ணாமலை, சமூகப் பிரச்சனைகள், அரசியல் பயிற்சி என மாற்று அரசியல் என தனது அடையாளமாக மாற்ற முயற்சித்து வருகிறார். இந்த அணுகுமுறை நிச்சயம் தமிழக அரசியலுக்கு புதிது தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English Summary

    Annamalai unveiled an inclusive political approach at We The Leaders’ first conference, aiming to build a long-term alternative in Tamil Nadu.