மேகதாது விவகாரம்.. மத்திய அரசு அரசியலுக்காக பின்வாங்குகிறது.. பாஜவை அட்டாக் செய்த அண்ணாமலை

  • சென்னை: மேகதாது விவகாரத்தில், மத்திய அரசு அரசியலுக்காக பின்வாங்குகிறது என்று வி த லீடஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலுக்கு அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த எழுத்து பூர்வ பதில் தமிழகத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலையும் காட்டமான கருத்துகளை முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    Advertisement

    மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது

    கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.

    Advertisement

    தேர்தல் அரசியலுக்காக

    இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?

    தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Annamalai, founder of the 'Vi Tha Leaders' organization, has accused the Central Government of backing down on the Mekedatu issue for political reasons. He was responding to the Union Water Resources Minister's statement that Tamil Nadu's permission is not required to construct the dam at Mekedatu.