அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!

  • சென்னை: 'இது நம்ம இயக்கம்' என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி இருக்கும் அண்ணாமலை எப்போது அதனை அரசியல் கட்சியாக மாற்றி அறிவிப்பார்? என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போதைக்கு அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவராது எனவும், இன்னும் சில மாதங்கள் இந்த இயக்கத்தை வலுப்படுத்திவிட்டு, அதற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை அண்ணாமலை தொடங்குவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

    Advertisement

    தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் பெயராக அண்ணாமலை மாறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர், புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளதோடு, அது எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறி தேர்தல்களிலும் போட்டியிடும் என கூறியிருக்கிறார்.

    Advertisement

    இந்த அறிவிப்பு வெளியானது முதல் தமிழக பாஜகவுக்குள் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
    டெல்லியில் தனது முடிவை அறிவித்த பிறகு சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அண்ணாமலை

    நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து, "இது நம்ம இயக்கம்" என்ற பெயரில் பொதுமக்களை இணைக்கும் பணியையும் அவர் தொடங்கியுள்ளார். ஆரம்ப கட்டத்திலேயே லட்சக்கணக்கானோர் பதிவு செய்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
    அண்ணாமலையின் இந்த நகர்வு வெறும் புதிய அமைப்பு தொடங்குவது மட்டுமல்ல, தமிழக அரசியலில் புதிய சக்தியை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பாஜக

    குறிப்பாக பாஜகவில் அவரை நம்பி இணைந்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர நிலை நிர்வாகிகள் பலர் தற்போது அவரை பின்தொடரத் தொடங்கியுள்ளனர். பாஜக மாநில துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து விலகுவதாக அறிவித்திருப்பது கட்சிக்குள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

    இது நம்ம இயக்கம்

    இதனால் பாஜக அமைப்பு ரீதியாக பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் பாஜக தரப்பு இந்த நிலையை வேறு கோணத்தில் பார்க்கிறது. அண்ணாமலைக்கு தனிப்பட்ட ஆதரவு கொண்டவர்கள் மட்டுமே வெளியேறுகிறார்கள் என்றும், சித்தாந்த அடிப்படையில் செயல்படும் நிரந்தர தொண்டர்கள் கட்சியிலேயே இருப்பார்கள் என்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

    Advertisement

    ஸ்லீப்பர் செல்கள்

    இந்நிலையில் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதம் ஒன்று எழுந்துள்ளது. அண்ணாமலை வெளியேறியிருந்தாலும், அவருக்கு ஆதரவான பலர் இன்னும் பாஜகவில் பதவிகளில் தொடர்கிறார்கள் என்ற பேச்சு பரவி வருகிறது. வெளிப்படையாக கட்சியை விட்டு செல்லாமல், சரியான நேரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படக்கூடிய "ஸ்லீப்பர் செல்கள்" பாஜகவுக்குள் இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

    எம்பி சீட்

    இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் நடந்த ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு தொடர்பான விவகாரமும் பாஜகவுக்குள் எழுந்துள்ளது. அண்ணாமலைக்கு எம்பி சீட் வழங்கப்படலாம் என பேசப்பட்ட நிலையில், அவர் பாஜகவிலிருந்து விலகியதால் அந்த சீட்டில் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவாளரை நிற்க வைக்கப் போகிறாராம். இந்நிலையில் அண்ணாமலையில் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Advertisement

    புதிய கட்சி

    இன்னும் சில மாதங்கள் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு விரிவாக்க பணிகளிலேயே கவனம் செலுத்தப்பட உள்ளது. அதன் பின்னரே கட்சியின் பெயர், கொடி, கொள்கை மற்றும் நிர்வாக கட்டமைப்பு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அண்ணாமலையின் புதிய அரசியல் முயற்சி பாஜகவுக்கு மாற்றாக உருவாகுமா, அல்லது பாஜகவைப் போலவே இருக்குமா என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. மேலும், அவர் பாஜகவிலிருந்து வெளியேறியதால் தமிழகத்தில் எதிர்காலத்தில் திமுக - தவெக - அண்ணாமலை என்ற மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.

    English Summary

    Annamalai is likely to strengthen ‘Idhu Namma Iyakkam’ before formally launching a political party in Tamil Nadu.