சென்னை: பாஜகவில் இருந்து விலகிய பிறகு அமைதியாக இருந்த அண்ணாமலை, தற்போது தனது புதிய அரசியல் பயணத்தை படிப்படியாக முன்னெடுத்து வருகிறார். "வி தி லீடர்ஸ்" என்ற இயக்கத்தை தொடங்கிய சில வாரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த காலத்தில் நேரடியாக திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்த அண்ணாமலை, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகியதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பலர் அவர் புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்த நிலையில், முதற்கட்டமாக "வி தி லீடர்ஸ்" என்ற இயக்கத்தை அறிவித்தார். அந்த அறிவிப்பின்போது அண்ணாமலை, பாஜகவில் இருந்த கால அனுபவங்கள், கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியிருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களிடமும் அந்த இயக்கம் கவனம் பெற்றது. அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும் அண்ணாமலைக்கு ஒரு தனிப்பட்ட ஆதரவு வட்டம் இருப்பதை இந்த உறுப்பினர் சேர்க்கை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக அரசியலில் ஆர்வம் காட்டுபவர்களை ஈர்க்கும் முயற்சியாக இந்த இயக்கம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதள நேரலையில் தோன்றிய அண்ணாமலை, வழக்கமான அலுவலக அல்லது ஸ்டூடியோ சூழலை தவிர்த்து, தனது சொந்த ஊரில் இருந்து மக்களிடம் பேசினார். விவசாய நிலம், மாட்டுக் கொட்டகை, சிறுவயது நினைவுகள், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை பகிர்ந்துகொண்ட அவர், தனது அரசியல் பயணத்தின் வேர்கள் எங்கு இருக்கின்றன என்பதை நினைவூட்டும் வகையில் அந்த நிகழ்ச்சியை அமைத்திருந்தார். "இந்த மண்ணில்தான் நான் வளர்ந்தேன். இந்த மக்களுக்காகத்தான் அரசியலில் இருக்கிறேன்" என்ற செய்தியை மறைமுகமாக அவர் சொல்ல முயன்றதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என அண்ணாமலை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. "அடுத்த கட்ட நடவடிக்கை" என்ற வார்த்தைதான் தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. பலரது கணிப்புப்படி, 50 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டிய பிறகு வி தி லீடர்ஸ் அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. அண்ணாமலை இதுகுறித்து நேரடியாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும் அவரது சமீபத்திய பேச்சுகள் மற்றும் அவரது அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் கட்சிக்கான அடித்தளப் பணிகளாகவே பார்க்கப்படுகின்றன. அண்ணாமலையின் நேரலையில் மற்றொரு முக்கியமான அம்சம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவர் கூறிய கருத்துகள்தான். "பலரும் களத்தில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்" என அவர் குறிப்பிட்டது, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வி தி லீடர்ஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர்கள், நேரடியாக சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதை விட, முதலில் உள்ளாட்சி அமைப்புகளில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவது என்பது நீண்டகால அரசியல் வளர்ச்சிக்கு உதவும். அதையே அண்ணாமலை பின்பற்றலாம் என்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றால், அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக மக்களவை தேர்தலை நோக்கி நகர்வதே அண்ணாமலையின் திட்டமாக இருக்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. குறிப்பாக, தனது சொந்த அரசியல் அடையாளத்தை உருவாக்கிய பிறகு நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். திமுக, தமிழக வெற்றிக் கழகம், அதிமுக என மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையே தனக்கான இடத்தை பிடிக்க அண்ணாமலை முயற்சிக்கிறார் என்கின்றன. இளைஞர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரை மையப்படுத்திய அரசியல் பாதையை உருவாக்கும் முயற்சியாக வி தி லீடர்ஸ் பார்க்கப்படுகிறது. எனினும் உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை அரசியல் வெற்றியாக மாறுமா, அந்த ஆதரவு வாக்குகளாக மாறுமா, உள்ளாட்சி தேர்தலில் அண்ணாமலை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.அண்ணாமலை
இந்நிலையில், அண்ணாமலையின் இயக்கம் தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே அதன் இணையதளம் வழியாக 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவே அண்ணாமலையின் புதிய முயற்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பாக அவரது ஆதரவாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.வி தி லீடர்ஸ்
அரசியல் பயணம்
50 லட்சம் உறுப்பினர்கள்
உள்ளாட்சி தேர்தல்
அண்ணாமலை ஆதரவாளர்கள்
நாடாளுமன்ற தேர்தல்
உறுப்பினர் சேர்க்கை