ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன?

  • சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த மிகப்பெரிய சஸ்பென்ஸ் தற்போது உடைந்துள்ளது. தமிழக பாஜக-வின் அதிரடி முகமாக அறியப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவிலிருந்து முறைப்படி விலகியுள்ளார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உடனான சந்திப்புக்கு பின் இந்த தகவல் கிடைத்துள்ளது. பாஜகவில் இருந்து விலகியதற்கான 5 பக்க கடிதத்தையும் அண்ணாமலை கொடுத்துள்ளார்.

    Advertisement

    டெல்லியில் பாஜக தேசியத் தலைமை வசம் அண்ணாமலை கொடுத்துள்ள 5 பக்கங்கள் கொண்ட கடிதம், அவரது 7 ஆண்டுகால பாஜக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தவெக தலைவர் விஜய், சட்டசபைத் தேர்தலில் புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த விலகலும், அடுத்தகட்ட 'செப்டம்பர்' திட்டமும் தமிழக அரசியல் களத்தை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் சிங்கம் ஐபிஎஸ் ஆக வலம் வந்து, 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 2020 ஆகஸ்ட்டில் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. 2021 முதல் 2025 வரை அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து, தமிழகத்தில் பாஜகவின் முகத்தை மாற்றிக் காட்டினார். அண்ணாமலையால் இளைஞர்கள் பலரும் பாஜகவை நோக்கி வந்தனர்.

    2021 சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை தோல்வி அடைந்தாலும், அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி அளிக்கப்பட்டது. சீனியர்களை கடந்து அண்ணாமலை பாஜகவின் முகமாக வளர்ந்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக திமுக எதிர்ப்பில் அதிமுகவை அண்ணாமலை ஒரு கட்டத்தில் பின்னுக்கு தள்ளினார் என்றே சொல்ல முடியும்.

    Advertisement

    பாஜகவின் கொள்கைகள் ஏற்கப்படவில்லை என்றாலும், அண்ணாமலைக்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆதரவு அலை இருந்தது. அதன் காரணமாகவே லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த 3வது அணி 18% வாக்குகளை பெற்றது. ஆனாலும் அண்ணாமலையை அந்தப் பதவியில் இருந்து தேசிய தலைமை நீக்கியது. இதனால் கடந்த ஓராண்டாகவே அண்ணாமலை அதிருப்தியில் இருந்தார்.

    டெல்லி தலைமையிடம் அண்ணாமலை கொடுத்துள்ள 5 பக்க கடிதத்தில் தன் விலகலுக்கான முக்கியக் காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் பூஜ்ஜியத்தில் இருந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் தேசியத் தலைமை குறுகிய காலத் லாபத்திற்காக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை ஏற்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டசபைத் தேர்தலில், அண்ணாமலையின் எதிர்ப்பையும் மீறி பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் இத்தேர்தலில் இக்கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. தனது தனித்துவமான அரசியல் பாதைக்கு டெல்லி முட்டுக்கட்டை போட்டதே இந்த 5 பக்க கடிதத்தின் சாராம்சம் என விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    பண பலம், சாதி பலம் இல்லாமல் இளைஞர்களைத் திரட்டி அரசியலில் சாதிக்க முடியும் என்பதைத் தவெக தலைவர் விஜய் 2026 தேர்தலில் நிரூபித்துக் காட்டியுள்ளார். இது என்னைப்போன்ற பல இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது என்று அண்ணாமலை தனது ஆதரவாளர்களிடம் நெருக்கமாகப் பகிர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இதனால் அண்ணாமலை டெல்லியில் இருந்து வந்த இயக்கம் ஒன்றை தொடங்கி கட்சிக்கான பணிகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இதன்பின் செப்டம்பர் மாதத்தில் அண்ணாமலை முறையாக கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அண்ணாமலை, தனது புதிய அரசியல் பயணத்தில் எந்த கொள்கையை பின்பற்றுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Annamalai: From IPS to Politician, Annamalai's 7-Year Saffron Journey Ends with a 5-Page Letter