சென்னை: அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்புக்கான தலைமை அலுவலகம் சென்னை ஈசிஆர் சாலையில் பிரம்மாண்டமாக அமைய உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த இடத்தை கரு.நாகராஜன மற்றும் ஆஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் பார்வையிட்டு வந்துள்ள நிலையில், ஜனவரி 1 முதல் அமைப்பின் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, அடுத்தக் கட்டமாக வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு மூலமாக போதைப் பொருள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேரணி, கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். தற்போது வீ தி லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.
இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும் போது அரசியல் கட்சியாக மாற்றம் பெறும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். அதற்கு முன்பாக மாவட்ட வாரியாக கட்சியின் கட்டமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் அண்ணாமலை தீவிரமாக உள்ளார். அதற்கேற்ப மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் வீ தி லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பயிற்சி பாசறை வகுப்புகளை தொடங்க அண்ண்ணாமலை தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் அமைப்புக்கான தலைமை அலுவலகம் அமைக்கும் பணிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் பிரம்மாண்டமான அலுவலகம் அமைய இருக்கிறது. இதனை வீ தி லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜனும், ஆஸ்பயர் சுவாமிநாதனும் பார்வையிட்டுள்ளனர். அடுத்த கட்டமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சென்று பயிற்சி பாசறை வகுப்புகளை தொடங்கி நடத்திட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உடனடியாக எந்த தேர்தலும் வரவில்லை என்பதால், அடுத்த ஆண்டுக்கு பின் கட்சி பெயர் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலையின் அமைப்பு சார்பாக நிர்வாகிகளை போட்டியிட முடிவு எடுக்க செய்யப்பட்டிருக்கிறது. இதில் அமைப்பின் வலிமையை கண்டறிய முடியும் என்று அண்ணாமலை கருதுகிறார். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிடுவோரையும் தங்கள் பக்கம் இழுக்க அண்ணாமலை ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.