சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் பெயராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாறியுள்ளார். அவர் பாஜகவில் இருந்து விலகப் போகிறாரா? புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளாரா? அல்லது டெல்லி மேலிடத்துடன் சமரசம் செய்து மீண்டும் முக்கிய பொறுப்பை ஏற்கப் போகிறாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால், இன்று வரை தன்னை 'பாஜக நிர்வாகி' என்றே அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, 2020-ஆம் ஆண்டு காவல்துறை பணியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தார். பாஜகவில் இணைந்த சில மாதங்களிலேயே தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.
பின்னர் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அவர், "என் மண் என் மக்கள்" நடைபயணம், திமுக அரசுக்கு எதிரான தொடர் விமர்சனங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள் போன்றவற்றின் மூலம் இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றார். தமிழகத்தில் பாஜகவின் முகமாகவே அண்ணாமலை பார்க்கப்பட்டார். குறிப்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு தனிப்பட்ட ஆதரவாளர் பட்டாளம் உருவானது. அண்ணாமலையின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்ட சம்பவம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பாஜக மேலிடம் அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்றி, நயினார் நாகேந்திரனை புதிய தலைவராக நியமித்தது. அதிமுக - பாஜக கூட்டணியை சுமூகமாக நடத்தவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் இந்த முடிவு அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. தேர்தல் பிரச்சாரத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமாக ஈடுபடவில்லை என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் நிலவியது. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற சந்திப்புகளின் போது, 5 பக்கங்கள் கொண்ட விரிவான ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் தனது அரசியல் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை, திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டேன், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது, மாநில அமைப்பில் நிர்வாக குறைபாடுகள் உள்ளன என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் ராஜினாமா முடிவு டெல்லி மேலிடத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு தனிப்பட்ட முகமாக உருவெடுத்துள்ள அண்ணாமலை வெளியேறினால், அது கட்சிக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை மேலிடத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அமித் ஷா நேரடியாக அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒருபுறம் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியாகிறது. மறுபுறம், அவர் இன்னும் பாஜக அடையாளத்தை தொடர்கிறார். இதனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையா அல்லது டெல்லி மேலிடத்தின் சமரச முயற்சிகளுக்கு அவர் அவகாசம் கொடுத்துள்ளாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. அண்ணாமலையின் பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதி அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அது, புதிய கட்சியா அல்லது தேசிய அரசியலில் புதிய பொறுப்பா என்பது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ஆன்மிகம் மற்றும் தேசியம் என்ற அடிப்படைகளில் புதிய அரசியல் பாதையை அவர் தேர்வு செய்யலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. அப்போது அண்ணாமலை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.அண்ணாமலை
கடும் அதிருப்தி
தமிழக பாஜக
மேலும், தமிழக பாஜக நிர்வாக செயல்பாடுகள் மற்றும் சில மூத்த தலைவர்களின் அணுகுமுறை குறித்தும் அவர் விரிவாக விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ராஜினாமா முடிவு
பாஜக நிர்வாகி
அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை அவர் பொதுவெளியில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவரது சமூக வலைதள கணக்குகளிலும் தற்போது வரை "பாஜக நிர்வாகி" என்ற அடையாளம் நீக்கப்படவில்லை. இதுவே அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.ஜூன் 4-ஆம் தேதி
நயினார் நாகேந்திரன்