சென்னை: தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தற்போது எடுத்துள்ள புதிய அரசியல் நிலைப்பாடு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் "மூன்று மொழிக் கொள்கை" தொடர்பான புதிய அறிவிப்புக்கு அவர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக அவர் மோடி அரசை வெளிப்படையாக எதிர்த்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மூன்று மொழிகள் கட்டாயம் என்ற திட்டத்தை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்தும் முடிவை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே 6-ஆம் வகுப்பில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய மொழியை தேர்வு செய்துள்ளனர். தற்போது திடீரென புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது குழந்தைகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்த நடைமுறை 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென 2026-27 கல்வியாண்டிலேயே அமல்படுத்த முயற்சிப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்து சாதாரண அரசியல் விமர்சனமாக மட்டும் பார்க்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க. தேசிய தலைமையுடன் அவர் மனவருத்தத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. கூட்டணியை உறுதி செய்வதற்காக, அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றியது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்காக மிக தீவிரமாக உழைத்தவர் அண்ணாமலை என்ற கருத்து கட்சியின் ஒரு பகுதி நிர்வாகிகளிடையே உள்ளது. இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி ஆதரவை உருவாக்கியிருந்த அவர், திமுக அரசை நேரடியாக எதிர்த்து பேசும் தலைவராக உருவெடுத்தார். ஊழல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், குடும்ப அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து தாக்குதலான அரசியல் செய்தார். அவரது தலைமையில் பா.ஜ.க. தமிழகத்தில் வேகமாக வளர்ந்ததாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஆனால், அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றிய பிறகு, கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் அதிகமாக பங்கேற்கவில்லை. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை தவிர்த்து, பல தேசிய அளவிலான ஆலோசனை கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்க முயற்சி செய்யப்பட்ட போதும், அதை அவர் ஏற்கவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. இருப்பினும், மாநிலம் முழுவதும் 95-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து கட்சிக்காக உழைத்தார். ஆனால், தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, "அண்ணாமலையை ஓரங்கட்டியதே பா.ஜ.க.வின் தோல்விக்குக் காரணம்" என்ற கருத்தும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் புதிய கட்சி பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து வைரலாக்கி வருகின்றனர். "புதிய தமிழகம் ஜனதா கட்சி" என்ற பெயரில் வெளியாகியுள்ள சில பதிவுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மத்திய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராக அவர் எடுத்துள்ள நிலைப்பாடு, "தமிழக உணர்வுகளை முன்னிறுத்தும் அரசியலை நோக்கி அண்ணாமலை நகர்கிறாரா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் அண்ணாமலை எடுக்கும் முடிவுகள், பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.மும்மொழிக் கொள்கை
அண்ணாமலை
தமிழக பாஜக
பிரதமர் மோடி
பாஜக படுதோல்வி
புதிய தமிழகம் ஜனதா கட்சி
பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி