ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை.. 20 லட்சத்தை நெருங்கும் ’வி தி லீடர்ஸ்’.! வலையில் விழும் கமலாலயம்?

  • சென்னை: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு இருந்துவரும் செல்வாக்கு, தற்போது உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கையில் பிரதிபலித்துள்ளது. அண்ணாமலையின் புதிய இயக்கத்துக்கு 18.52 லட்சம் பேர் ஆதரவளித்துள்ள நிலையில் பாஜகவில் உள்ள சில முக்கியத் தலைவர்களுக்கு அண்ணாமலை வலை வீசிவருகிறாராம்.

    Advertisement

    தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தனது அடுத்த அரசியல் பயணம் குறித்து அண்ணாமலை பல்வேறு சுட்டிக்காட்டுகளை வழங்கி வந்தார். அதன்பின்னர் "இது நம்ம இயக்கம்" என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை அவர் தொடங்கினார்.

    Advertisement

    புதிய தலைமுறை அரசியல், புதிய பார்வை மற்றும் மக்கள் மைய அணுகுமுறை ஆகியவற்றை முன்வைத்து இந்த இயக்கம் செயல்படும் என்று அவர் அறிவித்திருந்தார். இயக்கம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே உறுப்பினர் சேர்க்கை எதிர்பாராத அளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

    அண்ணாமலை

    தொடங்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து வேகமெடுத்து, சில நாட்களிலேயே பத்து லட்சத்தை கடந்தது. தற்போது வெளியான தகவல்களின்படி, இந்த இயக்கத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 18.52 லட்சத்தை கடந்துள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    வி தி லீடர்ஸ்

    அண்ணாமலை அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே இளைஞர்களிடம் தனித்துவமான ஆதரவைப் பெற்றிருந்தார். அதிரடியான பேச்சு, சமூக வலைதள செயல்பாடு, ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு மற்றும் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட பயணங்கள் ஆகியவை அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கியிருந்தன. அந்த ஆதரவே தற்போது வி தி லீடர்ஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். இதற்கிடையே, அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சில முக்கிய நிர்வாகிகளும் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கரு. நாகராஜன்

    அண்ணாமலையின் ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரும் விலகியுள்ளனர். இந்த நிலையில், மேலும் சிலர் அண்ணாமலையுடன் இணையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக, பாஜகவில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த சில மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    பாஜக

    அதே நேரத்தில், பாஜகவில் உள்ள அனைவரும் அண்ணாமலையுடன் செல்லப் போகிறார்கள் என்ற நிலை இல்லை என்றும், கட்சியில் தொடர விரும்பும் நிர்வாகிகளும் கணிசமான அளவில் உள்ளனர் என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும் அண்ணாமலையின் புதிய கட்சி தமிழக பாஜகவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை என்கிறார்கள்.

    இளைஞர் வாக்காளர்கள்

    இது மட்டுமல்லாமல், பிற அரசியல் கட்சிகளில் உள்ள சில முக்கிய தலைவர்களும் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைவது குறித்து ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இளைஞர் வாக்காளர்களை மையமாக வைத்து கட்சியை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து புதிய முகங்கள் இணையும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக அரசியலில் தற்போது திமுக, தமிழக வெற்றிக் கழகம், அதிமுக ஆகிய கட்சிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில், அண்ணாமலையின் புதிய இயக்கம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் மாதங்களில் தெளிவாகும். உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆதரவை வாக்குகளாகவும், அரசியல் சக்தியாகவும் மாறுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

    English Summary

    Annamalai’s political movement crosses 18.5 lakh registrations, triggering speculation over possible defections from Tamil Nadu BJP.