எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே!

  • சென்னை: பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது இயக்கத்தை வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல் வித்தியாசமான முறையில் கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, எதிர்காலத்தில் நிர்வாகிகளை தேர்வு செய்ய பயிற்சி மற்றும் தகுதித் தேர்வு முறையை அறிமுகப்படுத்தும் யோசனை பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி, "இது நம்ம இயக்கம்" என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார். சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட இந்த இயக்கம் குறுகிய காலத்திலேயே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அண்ணாமலையின் வி தி லீடர்ஸ் தளத்தில் உள்ள தகவலின்படி, பொதுமக்கள் நேரடியாக இணையும் வகையில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அண்ணாமலை

    இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    பொதுவாக அரசியல் கட்சிகளில் மாவட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்புகள் தலைமை முடிவின் அடிப்படையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் அதற்கு மாறான நடைமுறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது நம்ம இயக்கம்

    அதன்படி, தற்போது இயக்கமாக செயல்பட்டு வரும் அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்பட்ட பிறகு, கிளை மட்டத்திலிருந்து மாநில அளவிலான நிர்வாகப் பொறுப்புகள் வரை வழங்கப்படுவதற்கு முன்பு, குறிப்பிட்ட பயிற்சிகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் என கூறப்படுகிறது.
    இந்த நோக்கத்திற்காக கோவையில் அமைக்கப்பட உள்ள அப்துல் கலாம் ஒழுக்கநெறி மற்றும் அரசியல் மையம் முக்கிய பங்காற்றும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அரசியல் பயிற்சி

    இந்த மையத்தின் மூலம் அரசியல் நிர்வாகத் திறன், மக்கள் தொடர்பு, பொது சேவை, தலைமைத்துவ பண்புகள், தேர்தல் மேலாண்மை மற்றும் கொள்கை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலையின் அரசியல் பார்வை, இயக்கத்தின் நோக்கங்கள், நிர்வாகிகளிடம் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கம் மற்றும் செயல்திறன் போன்ற அம்சங்களும் இந்த பயிற்சிகளில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    தகுதித்தேர்வு

    பயிற்சியில் பங்கேற்பது மட்டுமல்லாமல், அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே கட்சி பொறுப்புகள் வழங்கப்படும் வகையில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம், அரசியலில் ஆர்வமுள்ளவர்களை நிர்வாக ரீதியாக தயார் செய்து பின்னர் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும் என்பதே அண்ணாமலையின் நோக்கமாக இருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    கட்சி நிர்வாகிகள்

    புதிய தலைமுறை அரசியலை உருவாக்க வேண்டும், சாமானிய மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்துகளை அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதனாலேயே இளைஞர்கள், தொழில்முறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முதல் முறையாக அரசியலுக்கு வர விரும்புவோருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அரசியல் அனுபவத்தை விட திறன் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகிகளை தேர்வு செய்யும் முயற்சி வெற்றியடையுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் நிலவுகிறது.

    அரசியல் தலைமைத்துவம்

    கட்சி நிர்வாகிகளுக்குப் பயிற்சி மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கி பின்னர் பொறுப்புகள் வழங்கும் நடைமுறை, தமிழக அரசியலில் இதுவரை பெரிய அளவில் பின்பற்றப்படாத ஒன்றாகும். எனவே, அண்ணாமலையின் இந்த முயற்சி நடைமுறைக்கு வந்தால் அது புதிய அரசியல் பரிசோதனையாக பார்க்கப்படும். இந்நிலையில், தற்போது உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் அண்ணாமலை, தனது இயக்கத்தை எப்போது அரசியல் கட்சியாக மாற்றுகிறார், நிர்வாக அமைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையே அவரது ஆதரவாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    English Summary

    Annamalai plans training and qualification tests for party posts, introducing a new political model focused on merit and leadership skills.