சென்னை: தமிழகத்தில் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் கலக்கி கொண்டிருக்க அமைதியாக இருக்கிறார் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக இருந்து 'வி த லீடர்ஸ்' அமைப்பை ஆரம்பித்திருக்கும் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தால்தான் கட்சி ஆரம்பிப்பேன் என சொன்ன நிலையில் அதில் பாதியை கூட இன்னும் தாண்டவில்லை. இதற்கிடையே கட்சியை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு வலைவீசி வருகிறார்களாம் அவரது ஆதரவாளர்கள். குறிப்பாக தென் மாவட்டங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக சொல்கின்றனர்.
கட்சியை ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து விட்டார் விஜய். தனுஷ், ராகவா லாரன்ஸ், சூர்யா என அடுத்தடுத்து சில நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள் என சொல்லப்படுகிறது. இதெற்கெல்லாம் காரணம் விஜய்.
கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் பெரு வெற்றி பெற்றதோடு ஆட்சியையும் பிடித்து விட்டார். இதனால் பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்து விட்ட நிலையில், சின்னத் தளபதி, மக்கள் நாயகன் என பட்டப் பெயர்களோடு, ரசிகர் மன்ற பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இதற்கிடையே தமிழக பாஜக தலைவராக இருந்து பெரும் செல்வாக்கோடு திகழ்ந்த அண்ணாமலை தற்போது 'வி த லீடர்ஸ்' அமைப்பை ஆரம்பித்திருக்கிறார். ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தால் தான் அரசியல் கட்சியை தொடங்குவேன் என அவர் அறிவித்தார். ஆனால் ஆரம்பித்தபோது இருந்த வேகம் தற்போது இல்லை. கிட்டத்தட்ட 21 லட்சம் உறுப்பினர்கள் தான் தற்போது வரை சேர்ந்து இருக்கின்றனர். கோவையில் முதல் மாநாட்டை நடத்திய அண்ணாமலை அடுத்தடுத்து சில நிகழ்வுகளை நடத்த இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க வைகையை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கு வங்கி சோதித்துப் பார்த்து விடலாம் என திட்டமிட்டு இருக்கும் அண்ணாமலை, அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் நியமனத்துக்காக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளாராம். இது ஒரு புறம் இருக்க கட்சியில் கரு நாகராஜன் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருக்கும் நிலையில் முகம் தெரிந்த நிர்வாகிகள் பெரும்பாலும் இல்லையாம். இதை அடுத்து மாவட்ட அளவில் அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னால் எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்களாம். அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடு புகார்கள் இல்லாத நபர்களிடம் தான் பேச வேண்டும் என அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். ஆனால் அது போன்ற நபர்கள் இருப்பது அரிது என்பதால் நிர்வாகிகள் சுணக்கம் காட்டுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அண்ணாமலையே களத்தில் இறங்கி சில நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் என்றும் சொல்கின்றனர். ஆனாலும், கூட்டம் கூடாததால் அதிருப்தியில் இருக்கிறார்களாம் வி த லீடர்ஸ் தலைகள். மற்றொரு புறம் அண்ணாமலை ஆதரவாளர்கள் பாஜகவில் இருந்து கிளம்பிய நிலையில் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சிக்கே அழைத்துவரும் வேலையை தொடங்கி இருக்கிறார் நயினார் நாகேந்திரன். அதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்தும் அண்ணாமலை ஆதரவாளர்கள் மீண்டும் பாஜகவுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் உற்சாகமடைந்திருக்கும் நயினார் மேலும் பல நிர்வாகிகளிடம் பேசி வருகிறாராம்.வி த லீடர்ஸ்
அண்ணாமலை
முன்னாள் எம்எல்ஏக்கள்
ஆதரவாளர்கள் அதிருப்தி
நயினார் நாகேந்திரன்