கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?

  • சென்னை: தமிழக பாஜக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் பெயராக மீண்டும் உருவெடுத்திருக்கிறார் அண்ணாமலை. மும்மொழிக் கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் வெளியிட்டுள்ள கருத்து, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக, மத்திய அரசின் திட்டங்களை எப்போதும் தீவிரமாக ஆதரித்து வந்த அண்ணாமலை, முதன்முறையாக வெளிப்படையாக எதிர்ப்பு குரல் எழுப்பியிருப்பது பாஜக வட்டாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை இந்த கல்வியாண்டிலேயே கட்டாயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார். 2029-30 கல்வியாண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என்று முன்பு அறிவித்தது சிபிஎஸ்சி.

    Advertisement

    இந்த நிலையில், திடீரென நடைமுறைப்படுத்தப்படுவது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை வெளியானதும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் கிளம்பின.

    அண்ணாமலை

    குறிப்பாக, "அண்ணாமலை பாஜகவில் அதிருப்தியில் இருக்கிறாரா?", "தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா?" என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையின் மனநிலை சற்றே மாறியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு, தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு அல்லது மத்திய அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    Advertisement

    அண்ணாமலை அதிருப்தி

    ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பதே அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    அதேபோல், தேர்தலில் அவரது ஆதரவாளர்களுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. பல தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற அவரது ஆலோசனைகளும் முழுமையாக ஏற்கப்படவில்லை.

    என் மண் என் மக்கள்

    இதனால், அண்ணாமலை தனி அரசியல் பாதையை தேர்வு செய்யும் சிந்தனையில் இருக்கிறார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் உலா வருகின்றன. சமூக வலைதளங்களில் கூட புதிய கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை குறித்து சில ஆதரவாளர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். "என் மண் என் மக்கள்" யாத்திரை மூலம் தமிழகம் முழுவதும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய அண்ணாமலை, அதையே அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் கட்சியை உருவாக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

    Advertisement

    நடிகர் ரஜினிகாந்த்

    இதனிடையே, அண்ணாமலை விரைவில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அண்ணாமலை முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்ற பேச்சுகள் இருந்தன. தற்போது கூட இருவருக்கும் நல்ல உறவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அரசியல் எதிர்காலம் தொடர்பாக ரஜினியின் ஆலோசனையை பெற்றார் என்ற யூகங்களும் எழுந்துள்ளன.

    பாஜக மேலிடம்

    மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தனது ஆதரவு வாக்கு வாங்கியை சோதித்து பார்க்கும் வாய்ப்பையும் அண்ணாமலை பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திருச்சி கிழக்கு உள்ளிட்ட காலியாக உள்ள தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை களமிறக்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இந்த சூழலில், அண்ணாமலையின் அதிருப்தியை சரிசெய்ய பாஜக மேலிடம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அமித் ஷா

    குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக அண்ணாமலையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரை கட்சிக்குள் தக்கவைத்துக் கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியில் அண்ணாமலை முக்கிய பங்காற்றியவர் என்பது கட்சித் தலைமையினருக்கும் தெரியும். கடந்த சில ஆண்டுகளில் பாஜகவிற்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்த கவனத்திற்கும், திமுக எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்தியதற்கும் அண்ணாமலை முக்கிய காரணமாக இருந்தார்.

    புதிய கட்சி

    எனவே, அவர் எடுக்கும் எந்த முடிவும் பாஜகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
    இதனால், அண்ணாமலை உண்மையில் புதிய கட்சி தொடங்குவாரா? அல்லது பாஜகவிலேயே தொடர்ந்து செயல்படுவாரா? என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அவரது சமீபத்திய அரசியல் நகர்வுகளும், மும்மொழிக் கொள்கை தொடர்பான அறிக்கையும், தமிழக அரசியலில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    Advertisement

    புதிய அத்தியாயம்

    அமித் ஷா மேற்கொள்ளும் சமாதான முயற்சிகள் வெற்றி பெறுமா? அல்லது அண்ணாமலை தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்குவாரா? என்ற கேள்விக்கான பதில் வரும் நாட்களில் தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English Summary

    Annamalai’s remarks on three-language policy fuel speculation over his future role and BJP’s next move in Tamil Nadu.