அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?


  • சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் பெயராக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாறியுள்ளார். பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பிரபல சாமியாரான 'வாழும் கலை' ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் அண்ணாமலை ஆலோசனை நடத்திய பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

    Advertisement

    தமிழக அரசியலில் சமீப நாட்களாக அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்று அண்ணாமலை. பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது.

    Advertisement

    இந்த நிலையில், தற்போது "அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார்" என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அவர் டெல்லி சென்றிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    அண்ணாமலை

    பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், அவரது அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, அரசியல் ஆர்வம் காரணமாக தனது பணியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார். அவரது பேச்சு முறை, நேரடி விமர்சனங்கள், சமூக வலைதள செயல்பாடுகள் ஆகியவை இளைஞர்கள் மத்தியில் அவருக்கு தனி வரவேற்பை ஏற்படுத்தின.

    Advertisement

    என் மண் என் மக்கள்

    குறிப்பாக "என் மண் என் மக்கள்" நடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜக பற்றிய விவாதம் அதிகரித்தது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது.

    அதிமுக - பாஜக

    ஆனால் அண்ணாமலையின் அரசியல் பாணி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக அதிமுக தலைவர்களை அவர் கடுமையாக விமர்சித்தது கூட்டணி அரசியலில் சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் அதிமுக - பாஜக உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. பின்னர் தேசிய தலைமையின் தலையீட்டால் கூட்டணி மீண்டும் அமைந்தாலும், அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

    Advertisement

    நயினார் நாகேந்திரன்

    அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஓராண்டுக்கும் மேலாகியும் எந்த புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. பிரசாரங்களில் மட்டும் பங்கேற்று விலகியே இருந்தார். அந்த தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறாததும் கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்பியது.

    பாஜக

    கடந்த தேர்தலில் இருந்த வளர்ச்சியை இந்த முறை கட்சி பதிவு செய்ய முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழலில்தான் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கின. சமீபத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றன. தேசிய அளவிலான பாஜக நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்ட கருத்தை அவர் முன்வைத்ததாக சிலர் விமர்சித்தனர்.

    Advertisement

    ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

    இதுவும் தனி அரசியல் அடையாளத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்பட்டது. மேலும், முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ஆன்மிக ஆலோசனைகளை பெறுவது அண்ணாமலையின் வழக்கம் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், அண்மையில் "வாழும் கலை" அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை அவர் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆன்மிகப் பயணம்

    அதுமட்டுமின்றி, நேபாளம் மற்றும் இமயமலை பகுதிகளுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு திரும்பியிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இத்தகைய ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வது அவரது வழக்கம் என்பதால், இந்த பயணத்திற்கும் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அண்ணாமலை உடனடியாக புதிய அரசியல் கட்சியை அறிவிக்காமல், முதலில் ஒரு மக்கள் இயக்கத்தை தொடங்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

    Advertisement

    வி தி லீடர்ஸ்

    ஏற்கனவே அவர் நடத்தி வரும் சமூக சேவை அமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது அல்லது புதிய பெயரில் ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 4-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அதற்கு முன்பாக நடைபெறும் டெல்லி சந்திப்புகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. அண்ணாமலை பாஜகவிலேயே தொடர்வாரா? தேசிய அளவிலான பொறுப்பு பெறுவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்ற கேள்விகளுக்கு இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை.

    English Summary

    Annamalai’s Delhi visit and political future spark intense speculation across Tamil Nadu politics.