சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த தசரா நிகழ்ச்சியில் கரப்பான்பூச்சியை கொளுத்தி பாஜக எம்எல்ஏ அசோக் கோயல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சிஜேபி போராட்டம் தொடர்பாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை 5 கேள்விகளை மத்திய பாஜக அரசுக்கு எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011ல் ஊழலுக்கு எதிராக டெல்லி ராம்லீகா மைதானத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்திய போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, என் கைகள் கட்டப்படவில்லை என்றால், நானும் டெல்லிக்கு சென்று போர்க்கொடி தூக்கி இருப்பேன் என்றார்.
அப்போது நரேந்திர மோடி கூறியது சரி.. அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இன்று நிலைமை என்ன? நீட் தேர்வு வினாத்தாள் கசிவின் போது நடந்த போராட்டத்தின் போதே என் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து வருகின்றன. அவற்றை பொருட்படுத்தாமல் கடந்துவிட்டேன். அதேபோல் என்னை பாஜகவின் பி டீம் மற்றும் துரந்தர் என்றெல்லாம் முத்திரை குத்துவதை அந்த வசைகள் விரைவாக அகற்றிவிடும் என்பதால், உள்ளுக்குள் ரசிக்கவும் செய்தேன். தற்போது மீண்டும் என் மீது தாக்குதல் தொடங்கிவிட்டன. ஒரு பிரச்சனைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவோ, போராடவோ அனைவருக்கும் உரிமை உள்ளது. சிஜேபி போராட்டம் தொடர்பாக சிலருக்கு அசெளகரியம் ஏற்பட்டாலும், 5 கேள்விகளை கேட்க விரும்புகிறேன். 1. சிஜேபி போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் அளித்த உடனே, ஜந்தர் மந்தர் போராட்டக் களப் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டது எப்படி? 2. அதேபோல் தடுப்புக் காவலில் வைப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் சிறப்பு நடுவராக டெல்லி காவல்துறையின் உதவி ஆணையரே செயல்படுவது எந்த வகையில் நியாயம்? வழக்கில் புகார்தாரரான காவல்துறையே நீதிபதியாக செயல்பட்டால், நடுநிலை எப்படி சாத்தியம்? 3. அதேபோல் அக்டோபர் 13ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் விசாரணைக்கு சிறப்பு நடுவர் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி விசாரணையில் இருந்து விலகியது ஏன்? அதுமட்டுமல்லாமல் பிணைதாரர்கள் நீக்கப்பட்டு, அவர்களை குறுக்கி விசாரணைக்கு உட்படுத்தியது ஏன்? 4. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டங்களின் போது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதேபோல் தசரா விழாவில் கரப்பான்பூச்சி பொம்மையை எரித்து பாஜக எம்எல்ஏ அசோக் கோயல் வீடியோ வெளியாகி இருக்கிறது. சிஜேபியை பாகக எதிர்க்கிறதா அல்லது அந்தக் கட்சிக்கு விளம்பரம் தேடி கொடுக்கிறதா? 5. பாஜகவை விமர்சிப்பவர்கள் மீது தேச விரோதி என்று முத்திரை குத்துவது அலுப்பூட்டும் நடவடிக்கையாக உள்ளது. எஃப்சிஆர்ஏ உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மத்திய பாஜக அரசு, எப்போதும் ஒரு செயற்கையான எதிரியை உருவாக்கி கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.கரப்பான்பூச்சி கட்சிக்கு அண்ணாமலை ஆதரவு.. மத்திய அரசு - டெல்லி போலீசை விளாசிய 'வி தீ லீடர்ஸ்'