தரம் தாழ்ந்து பேசுவதில்தான் போட்டியே.. உதயநிதி - ஆதவ் பேச்சை பகிர்ந்து அண்ணாமலை அட்டாக்

  • சென்னை: தமிழ்நாடு அரசியலில் யார் இன்னும் கீழ்த்தரமாக, தரம் தாழ்ந்து பேசுவதில் தான் போட்டி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசும் காட்சிகளை பகிர்ந்து வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் நாகரிகமற்ற செயல்பாடுகளின் இருளுக்குள் நமது இளைஞர்களையும் இழுத்து சென்றுவிடாதீர்கள்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தவெகவிற்கும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுகவுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    Advertisement

    கடலை பார்ப்பது போல..

    தவெகவிற்கு வாக்கு கேட்டு முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலகம் கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் உதயநிதியை மிகவும் காட்டமாக விமர்சித்தார்.

    இந்த நிலையில், இருவரின் பேச்சையும் பகிர்ந்துள்ள அண்ணாமலை யார் கீழ்த்தரமாக பேசுவது என்பதுதான் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்று விமர்சித்து இருவரும் பேசும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். அண்ணாமலை பகிர்ந்து இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோவில் இடம் பெற்று இருப்பதாவது:-

    Advertisement

    முதல்வர் சொன்னது என்ன? பணமே இல்லை.. கஜானாவை துடைத்து வைத்துக்கொண்டு சென்று இருக்கிறார்கள் என்றார். ஆனால் புது சட்டமன்றம் ரூ.1,200 கோடியில் தலைமை செயலகத்தில் இருந்து கடலை பார்ப்பது போல பீச் பேசிங் கட்ட திட்டமிடுகிறார். கடலை பார்த்தால்தான் அவருக்கு மூட் வரணுமாம். மூட் என்றால் நான் வேலை பார்க்கிற மூட்- ஐ சொன்னான்..

    அந்தபுரத்து இளவரசர்

    நீங்கள் எதாவது சொல்லி விட்டு போய்விடுவீர்கள். கேஸ் என் மேலே விழுகும். காவிரியில் தண்ணி திறந்து விடுங்கள் என்று சொன்னேன். அதற்கே கேஸ் போட்டுவிட்டார்கள்" என்று உதயநிதி பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார். உதயநிதியின் பேச்சுக்கு பதிலடியாக ஆதவ் அர்ஜுனாவும் மிகவும் கடுமையாக பேசியிருந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

    Advertisement

    4 மணிக்குதான் தூங்கி எழுந்து வருவாரா? அந்தபுரத்து இளவரசர் என்றால் இரவு முழுவதும் வேலை இருக்கும்பா.. அவர் எப்போ பகலில் எழுந்திருப்பார். அதனால்தான் அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அந்தபுரத்து இளவரசருக்கு என்ன வேலை" என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    கீழ்த்தரமாக பேசுவதில் போட்டி

    இதனை பகிர்ந்துள்ள அண்ணாமலை, "தமிழ்நாட்டின் அரசியல் பொது விவாதங்கள் யார் இன்னும் கீழ்த்தரமாக இறங்கி பேச முடியும் என்ற போட்டியாக மாறி வருகிறது. நமது இளைஞர்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பாதையை உங்களால் காட்ட முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை.. குறைந்தபட்சம் உங்கள் நாகரிகமற்ற செயல்பாடுகளின் இருளுக்குள் அவர்களையும் இழுத்து சென்றுவிடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Annamalai, leader of the 'We the Leaders' organization, shared visuals of Udhayanidhi Stalin and Aadhav Arjuna, commenting that the competition in Tamil Nadu politics seems to be over who can speak in the most crude and undignified manner. He further urged them not to drag the youth into the darkness of their uncivilized conduct.