மோசமான தமிழ்நாடு.. ‘இதை’ மட்டும் செய்து கொடுங்க! விஜய்க்கு திடீர் கோரிக்கை விடுத்த அண்ணாமலை! என்ன?

  • சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தளங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய சூழலில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு அருகே விதிகளை மீறி 129 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றையும் மூட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தமிழக பாஜக முன்னாள் தலைவரும் வீத லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனமான அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்தத்தில்," 2026 மே 12-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம், 717 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளை மூடிம் என அறிவிக்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அடையாளம் காணும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    அதன் அடிப்படையில், 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை மூட உத்தரவிடப்பட்டது. மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் அரசின் முயற்சிகளுக்கு பங்களிக்கும் வகையில், "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஜூலை மாதம் முழுவதும் ஆண்டுதோறும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துவதாக வீ தி லீடர்ஸ் அறிவித்துள்ளது.

    அண்ணாமலை

    அதன் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கான செயல்திட்டத்துடன் கூடிய கொள்கை அறிக்கையையும் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அந்தக் கொள்கை அறிக்கையில், மாநிலத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தோம். 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Magnitude of Substance Use ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டில் மது அருந்துவோர் விகிதம் மொத்த மக்கள்தொகையில் 14.2 சதவீதமாக இருந்தது.

    Advertisement

    மது அருந்துவோர்

    மது அருந்துவோரின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு (National Family Health Survey) அறிக்கையின்படி, 2023-24-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மது அருந்துவோரின் விகிதம் 23.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெறும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 சதவீத உயர்வு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.

    பள்ளி அருகே டாஸ்மாக்

    இந்தச் சூழலில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில். எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டின் தங்கச் சந்தையின் மதிப்பு சுமார் ரூ.90,000 கோடி என மதிப்பிடப்படுகிறது. அதேசமயம், தனியார் பார்கள், பப்கள் போன்றவற்றின் வருவாயைத் தவிர்த்து, டாஸ்மாக் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்கிறது.

    Advertisement

    717 டாஸ்மாக் கடைகள்

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுபானப் பயன்பாடு, குடும்பங்களின் சேமிப்பை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், சுகாதாரச் செலவினங்களை அதிகரித்துள்ளது. குடும்பங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை குறைந்து, மாநிலத்தின் உற்பத்தித் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி, குறிப்பிட்ட பகுதிகளில் 717 டாஸ்மாக் கடைகள் மட்டுமே உள்ளனவா என்பதை அறிய, சென்னை நகரில் நாங்கள் ஒரு மாதிரி ஆய்வை மேற்கொண்டோம்.

    அரசின் வழிகாட்டுதல்

    அந்த ஆய்வில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் தொடர்ந்து செயல்பட்டு வந்த 10 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, இந்த ஆய்வை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்து, அரசின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் எங்களிடம் பகிரும் வகையில் ஒரு படிவத்தை வெளியிட்டோம்.

    Advertisement

    முதல்வர் விஜய்

    பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களை முழுமையாக சரிபார்த்த பிறகு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் 129 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளோம். எனவே, இணைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலை தமிழ்நாடு அரசு பரிசீலித்து, 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடைகளை விரைவாக மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.

    English Summary

    Annamalai urges Tamil Nadu government to close 129 TASMAC shops allegedly violating the 500-metre rule.