விஜய்க்கு தெரிந்துதான் முடிவு எடுக்கப்படுகிறதா! எதிர்ப்பு வந்தால் பின்வாங்குவது ஏன்? அண்ணாமலை கேள்வி

  • சென்னை: தவெக அரசு எடுத்த பல முடிவுகள், எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்ப பெறப்படுவது, நிர்வாகத் தெளிவின்மையை காட்டுவதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்பு வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் வேண்டும் என்று கூறியுள்ள அண்ணாமலை, ஒவ்வொரு முடிவும் விஜய்யின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டம் ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழக அரசு காலையில் அரசாணை வெளியிட்டது. அதன்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பில் இருந்து பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்தது. இதனால் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பின. இந்த நிலையில் தமிழக அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியானது. கரூர் விவகாரம் தொடர்பாக மீண்டும் விவாதம் நடக்க கூடாது என்பதற்காக தவெக இப்படியொரு டைவர்ஷன் திட்டத்தை அரங்கேற்றியதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இருப்பினும் திமுக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகள் கரூர் விவகாரம் பற்றி பேசின. இந்த நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

    Advertisement

    முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.

    இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா? அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

    Advertisement

    ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Annamalai: We The Leaders Chief Annamalai Criticizes CM Vijay’s TVK Govt Over Frequent Policy Reversals