அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்!

  • சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி தனது 'வீ த லீடர்ஸ்' எனும் அமைப்பை பலப்படுத்தி வருகிறார். இந்த இயக்கத்தில் இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் பாஜகவிலிருந்து வந்தவர்கள் என்று ஒரு பக்கம் பேச்சுகள் இருந்தாலும், அதிமுக ஆதரவாளர்கள்தான் பரவலாக இதில் இணைகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

    Advertisement

    தமிழக அரசியலில் மாற்றங்கள் மிக வேகமாக நடந்து வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தலைமயிலான தமிழக வெற்றிக் கழகம், 107 இடங்களில் ஜெயித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து விஜய்யை முதலமைச்சராக்கின.

    Advertisement

    பாஜகவின் தோல்வி

    மறுபுறம் கடந்த 2021 தேர்தலில் 4 தொகுதிகளில் ஜெயித்திருந்த பாஜக இந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே ஜெயித்திருந்தது. பாஜகவின் வெற்றி பறிபோக எடப்பாடியின் தந்திரமான அரசியல் நகர்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

    அதாவது, அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் விமர்சனத்தை தாண்டி தனிநபர் விமர்சனத்தையும் அண்ணாமலை செய்திருந்தார். இது எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்லாது, அவரது ஆதரவாளர்களையும் சூடாக்கியது. எப்படியும் இந்த தேர்தலில் கூட்டணிக்கு வருவார்கள், அப்போது செஞ்சிடலாம் என்று எடப்பாடி காத்திருந்தார்.

    Advertisement

    கூட்டணி தந்திரம்

    அதற்கேற்றார்போல, கூட்டணிக்கு வந்தது பாஜக. தொகுதி பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமியின் கைதான் ஓங்கியிருந்தது. யாருக்கு எந்த தொகுதியை வேண்டுமானாலும் கொடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நான் கொடுப்பதுதான் தொகுதி என்று.. கடந்த முறை பாஜக வென்ற தொகுதிகளை கொடுக்காமல் அதற்கு பக்கத்து தொகுதிகளை கொடுத்து ஆட்டத்தை மாற்றினார் எடப்பாடி. இதனால் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.

    அண்ணாமலைக்கு ஸ்கெட்ச்

    அதிலும் குறிப்பாக அண்ணாமலை தேர்தல் அரசியலுக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி மிகவும் கவனமாக இருந்தார். இதனால் கடைசி வரை அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் டென்ஷன் ஆன, அண்ணாமலை.. சரி மாநில பாஜகதான் எடப்பாடிக்கு எதிராக சண்டை செய்யாமல் முதுகில் குத்திவிட்டது, தேசிய தலைமையை நம்புவோம் என்று, கவர்னர் மாதிரியான பதவிக்காக காத்திருந்தார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

    Advertisement

    சூடான அண்ணாமலை

    இது மேலும் அவரை அப்செட் ஆக்கியது. இதையடுத்து டெல்லி சென்று முகாமிட்ட அவர், தேசிய தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து, பாஜகவிலிருந்து விலகுவதாக கூறினார். வழக்கமாக ஒரு கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர் விலகுகிறார் எனில், அதை போய் அக்கட்சியின் தலைவரை சந்தித்து சொல்லிக்கொண்டிருக்க மாட்டார். மாறாக வெளிப்படையாக அறிவித்து.. வெளியே வந்துவிடுவார். அண்ணாமலை விஷயத்தில் அப்படியே உல்டாவாக நடந்திருந்தது.

    'வீ த லீடர்ஸ்'

    இப்படியாக ராஜினாமா காட்சிகள் முடிந்த பின்னர், தமிழகம் வந்த அண்ணாமலை, தன்னுடைய 'வீ த லீடர்ஸ்' எனும் அமைப்பை பலப்படுத்துவதாக அறிவித்து, அதற்கான ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.

    Advertisement

    தொடக்கத்தில் அண்ணாமலையின் நடவடிக்கை, பாஜகவுக்குதான் ஷாக் கொடுத்தது. காரணம், பாஜகவில் அண்ணாமலையின் தலைமையை விரும்பியவர்கள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் இணைந்தனர். ஆனால், உண்மையில் இது பாஜகவுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் கிடையாது. அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    கொங்கு பெல்ட்

    கிருஷ்ணகிரி தொடங்கி சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் வரை அதிமுக பலமாக இருக்கிறது. அண்ணாமலை தனது இயக்கத்தின் உறுப்பினர் பதிவை தொடங்கிய பின்னர், இந்த பகுதியில் உள்ள அதிமுக ஆதரவாளர்கள் பலரும் 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் இணைந்ததை பார்க்க முடிகிறது.

    Advertisement

    அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தவர்கள், அதற்கான உறுப்பினர் படிவத்தை தனது வாட்ஸ்அப் ஸ்டேடஸில் வைத்திருக்கிறார்கள். இப்படி வைத்தவர்கள் பலரும் அதிமுகவின் ஆதரவாரளர்கள்தான். குறிப்பாக தங்கள் பெற்றோர் அதிமுகவினராக இருக்கும் வீடுகளில், இளைஞர்கள் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்திருக்கின்றனர்.

    இதையெல்லாம் பார்க்கும்போது, அதிமுக வாக்கு வங்கியை திசை திருப்பி எடப்பாடி பழனிசாமியை காலி செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன்தான் அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை களமிறங்கி இருக்கிறதோ? என்கிற கேள்வி எழுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Annamalai: Former BJP state president Annamalai has stepped away from the party and is strengthening his own organization, 'We the Leaders'. Over 500,000 people have joined the movement so far. While there is talk that these members come from the BJP, it is primarily AIADMK supporters who are joining in large numbers. This has left Edappadi Palaniswami deeply dissatisfied.