நாகர்கோவிலை தொடர்ந்து புழல்.. தமிழகத்தில் மற்றொரு சிறை கைதி உயிரிழப்பு! தவெக அரசுக்கு நெருக்கடி

  • சென்னை: நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு விசாரணை கைதி உயிரிழந்திருக்கிறார். இது தவெக அரசுக்கு எதிராக புதிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.

    Advertisement

    புழல் சிறையில் குட்கா வழக்கில் விசாரணை கைதியாக பாலாஜி என்பவர் அடைக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்துவிட்டதாக போலீசார் கூறியிருக்கின்றனர். ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

    Advertisement

    புழல் சிறையில் என்ன நடந்தது?

    சென்னை சேலையூர் ஜானகிராமன் தெருவை சேர்ந்த பாலாஜி (44) என்பவர், பெட்டிக்கடை நடத்தி வந்திருக்கிறார். இவரது கடையில் கடந்த 12ம் தேதி அதிரடி ரெய்டை போலீசார் மேறகொண்டபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து குட்கா பொருட்களை விற்றதாக கூறி, பாலாஜியையும் அவருடன் மேலும் ஒருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

    திடீர் நெஞ்சுவலி

    புழல் சிறையில் விசாரணை கைதிகளின் அறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜிக்கு இன்று காலை 7.45 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனே அவரை காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறிவிட்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

    Advertisement

    உறவினர்கள் குற்றச்சாட்டு

    சிறையில் காவலர்கள் தாக்கியதால்தான் பாலாஜி உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை மறுத்துள்ள காவல்துறையினர், பாலாஜி மீது ஏற்கெனவே குட்கா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. மட்டுமல்லாது அவர் சுகர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த பாதிப்பால்தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

    அடுத்தடுத்து வெடிக்கும் பிரச்சனை

    ஏற்கெனவே நாகர்கோவில் கிளை சிறை மரணம், தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு குறித்து, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்த விஜய், தற்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த மரணம் தொடர்பாக எதையும் பேசாதது ஏன்? நாகர்கோவிலை தொடர்ந்து தற்போது புழல் சிறையிலும் மரணம் ஏற்பட்டிருக்கிறதே! இதைபற்றி எல்லாம் ஏன் முதல்வர் பேச மறுக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

    English Summary

    Another Custodial Death: While the death of an undertrial prisoner lodged in the Nagercoil sub-jail had already caused shock across Tamil Nadu, another undertrial prisoner lodged in Puzhal Prison has now passed away. This has emerged as a new issue confronting the TVK government.