ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த ஷாக்.. சாட்சியாக இருக்கும் சிறுமி புதிய பாலியல் புகார்

  • சென்னை: தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது 8 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக வழக்கில் சாட்சியாக இருக்கும் சிறுமி ஒருவர் ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கு வயது 82. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுத்தடுத்து புகார்கள் வந்து கொண்டுள்ளன.

    ஜெம் வீரமணி மட்டுமின்றி அவருக்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், டிரைவர் லாசர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெம் வீரமணி மீது மொத்தம் 8 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சாந்தி மீது 3 வழக்குகளும், அவரது கணவர் மகேந்திர சிம்மன் மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பற்றி சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது ஜெம் வீரமணி மீது இன்னொரு சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளார். ஜெம் வீரமணி மீதான வழக்கில் இந்த சிறுமி தற்போது சாட்சியாக உள்ள நிலையில் தானும், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

    அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெம் வீரமணி மீது சிறுமிகள் தொடர்ந்து பாலியல் புகார் அளித்து வரும் நிலையில் இன்னும் எவ்வளவு பேரிடம் ஜெம் வீரமணி தவறாக நடந்துள்ளாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதுமட்டுமின்றி ஜெம் வீரமணி மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில் 2 வழக்குகளிலும் போலீசார் இறுதி அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஜெம் வீரமணியின் டிரைவர் லாசரை ஒருநாள் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெம் வீரமணி தவறு செய்வதற்கு பயன்படுத்திய வெள்ளை நிற கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Eight sexual offense cases have been registered against Gem Veeramani, a prominent businessman in Tamil Nadu. Following this, a young girl-who is a witness in the case-has filed a sexual harassment complaint against him, causing a major stir.