இன்னொரு கூவத்தூரா? பணத்தோடு வந்த தவெக தலைகள்! குண்டைத் தூக்கிப்போட்ட ஐயூஎம்எல் எம்எல்ஏ

  • சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 'கூவத்தூர்' என்ற சொல் ஏற்படுத்திய அதிர்வலைகள் அத்தனை எளிதில் யாராலும் மறக்க முடியாது. 2017-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய குழப்பங்களின்போது, எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் தக்கவைக்க நடந்த ரகசிய முகாம்களும், பேரங்களும் இந்திய அரசியலையே உலுக்கின. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே குதிரை பேர வாசனை மீண்டும் தமிழக அரசியல் களத்தில் வீசத் தொடங்கியிருக்கிறது.

    Advertisement

    இந்த முறை புயலைக் கிளப்பியிருப்பவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா.

    Advertisement

    பணத்தோடு வந்தார்கள்... கறாராக மறுத்தேன்

    சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சையத் பாரூக் பாஷா, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தன்னிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகக் கூறி அதிர வைத்துள்ளார்.

    "தேர்தல் முடிவுகள் வந்து மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றதும்.. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் என்னை நேரில் அணுகினார்கள். அவர்கள் வெறும் பேச்சோடு வரவில்லை; பெருந்தொகை பணத்துடன் வந்தார்கள். புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில், தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேரம் அது. ஆனால், இயக்கத்தின் கோட்பாடுகளுக்கும் தலைவர்களின் வழிகாட்டலுக்கும் துரோகம் இழைக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்த்தி, அவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்பிவிட்டேன்" என்று அவர் வெடித்துள்ளார்.

    Advertisement

    பொதுவெளியில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ ஒருவரே இப்படிப் பகிரங்கமாகப் பணப் பட்டுவாடா முயற்சி குறித்துக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கூவத்தூர் பாணி அரசியலா?

    கடந்த காலங்களில் அதிமுக உட்கட்சிப் பூசலின் போது கூவத்தூரில் அரங்கேறிய சம்பவங்கள் நாடறிந்தவை. தற்போதைய சூழலில், தேர்தல் களத்தை நோக்கி வியூகம் அமைத்து வரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த அல்லது பிற கட்சிப் பிரமுகர்களைத் தங்கள் அணிக்குக் கொண்டுவரத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதே புகாரை அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்திருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கியப் பிரதிநிதியைத் தங்களின் வலைக்குள் இழுக்க முயன்றிருப்பது, ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குள் ஒருவித கலக்கத்தை உண்டுபண்ணியுள்ளது.

    கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி, பலவீனமான எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து இழுக்கும் 'கூவத்தூர் கலாசாரம்' புதிய முகம் பூண்டு மீண்டும் திரும்புவதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    தவெகவின் நிலைப்பாடு

    இந்தக் குற்றச்சாட்டைத் தமிழக வெற்றிக் கழகத் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. தங்கள் கட்சி தூய்மையான மற்றும் வெளிப்படையான அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், மாற்றத்தை விரும்பும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வரும் தவெக-வின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இத்தகைய ஆதாரமற்ற புகார்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    இருப்பினும், சையத் பாரூக் பாஷா போன்ற எம்.எல்.ஏ ஒருவர் மிகத் துல்லியமாக இத்தகைய விவரங்களை அடுக்கியிருப்பது, தவெக தலைமைக்குப் பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியிருக்கிறது.

    அறிவாலயத்தின் அடுத்த நகர்வு என்ன?

    ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ-வின் இந்த வெளிப்படையான பேட்டி திமுக தலைமைக்கும் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது. ஏற்கனவே தவெக குதிரை பேர விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில் இந்த பேட்டி அதை உறுதி செய்துள்ளது.

    கூவத்தூர் நாட்களைப் போலத் திரைமறைவு அரசியல் மீண்டும் அரங்கேறுகிறதா அல்லது இது வெறும் தேர்தல் கால அரசியல் பரஸ்பரக் குற்றச்சாட்டா என்ற கேள்விக்கு அடுத்தடுத்த நகர்வுகளே விடை சொல்லும்.

    English Summary

    Another Koovathur in TN Politics? IUML MLA Syed Farooq Pasha's Explosive Poaching Charge Against TVK