அதே ஜெ. ஸ்டைல்.. மதுரவாயல் பாலம் போல் அண்ணா சாலை பாலமும் முடங்குகிறது! நந்தனம் பால பணி நிறுத்தம்?

  • சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அண்ணா சாலையில் தொடங்கப்பட்ட தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையிலான 3.2 கிலோமீட்டர் நீள மேம்பாலப் பணி, தற்போது கடுமையான வடிவமைப்பு சிக்கலில் சிக்கியுள்ளது.

    Advertisement

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திமுக கொண்டு வந்ததற்காகவே அந்த திட்டத்தை ஜெயலலிதா நிறுத்திய நிலையில், சுமார் 14 ஆண்டுகள் வெறும் தூண்களோடு காட்சிப் பொருளாக நின்ற வரலாறு சென்னை மக்களுக்கு நினைவிருக்கலாம். அதை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பே சரி செய்து, திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து மீண்டும் பணிகளைதொடங்கியது .

    Advertisement

    தற்போது அண்ணா சாலையிலும் அதேபோன்ற ஒரு சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது. நந்தனம் - தேனாம்பேட்டை இடையேயான மேம்பாலப் பணிகள் தற்காலிகமாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரூ.621 கோடி திட்டமும் திட்டமிடல் குளறுபடியும்

    ரூ.621 கோடி மதிப்பீட்டில், அதிநவீன எஃகு கட்டமைப்புகளைக் கொண்டு 2024 ஜனவரியில் இந்த 4-வழி மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் அடித்தளத்தின் மீதே இந்த எஃகு தூண்களை விரைவாக அமைத்துவிடலாம் என்றும், 2026 செப்டம்பருக்குள் பணிகளை முடித்துவிடலாம் என்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருந்தது. சைதாப்பேட்டை முதல் நந்தனம் வரையிலான பகுதியில் 88 தூண்கள் அமைக்கப்பட்டு, 50 ஸ்பேன்களும் பொருத்தப்பட்டன.

    Advertisement

    ஆனால், நந்தனம் - தேனாம்பேட்டை வழித்தடத்தில் பணிகளை முன்னெடுக்க முயன்றபோதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்த வழித்தடத்தின் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலைய அடித்தளங்களின் துல்லியமான அமைப்பை ஆரம்ப விரிவான திட்ட அறிக்கை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது என்பது நடுவழியில்தான் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால் இதுதான் உண்மையான காரணமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    நடுப்பகுதியில் தூண்கள் அமைப்பதில் என்ன சிக்கல்?

    பொதுவாகச் சாலைகளின் மையப்பகுதியில் (Median) தூண்கள் அமைப்பது வழக்கம். ஆனால், நந்தனம் - தேனாம்பேட்டை வழித்தடத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் அடித்தளங்கள் நேர்கோட்டில் அமையவில்லை. மேலும், சைதாப்பேட்டையில் 40 மீட்டராகவும், டி.எம்.எஸ் அருகே 36 மீட்டராகவும் உள்ள அண்ணா சாலையின் அகலம், செனடாப் சாலை சந்திப்பில் வெறும் 28 மீட்டராகவும், அறிவாலயம் அருகே 32 மீட்டராகவும் குறுகிவிடுகிறது.

    Advertisement

    மெட்ரோ அடித்தளத்தின் மீது அப்படியே மையத் தூண்களை அமைத்தால் மேம்பாலம் வளைந்து நெளிந்து செல்லும் ஆபத்து ஏற்படுவதுடன், குறுகலான அண்ணா சாலையில் மையத் தூண்களை நடும்போது கீழே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழலும் உருவானது. இதையடுத்து, அசல் திட்ட வடிவமைப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஏற்பட்டது.

    புதிய வடிவமைப்பு: 'போர்டல்' தூண்கள் திட்டம்

    இச்சிக்கலைத் தீர்க்க, சாலையின் நடுவே தூண்களை அமைப்பதற்குப் பதிலாக 'போர்டல்' (Portal) ரக தூண்களை அமைக்க நெடுஞ்சாலைத்துறை புதிய திட்ட வரைவை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுள்ளது. இதன்படி, நந்தனம் மற்றும் தேனாம்பேட்டை மெட்ரோ நிலையப் பகுதிகளில் 45 பிரத்யேக தூண்கள் அமையவுள்ளன. சாலையின் இருபுறமும் நடைபாதை ஓரமாகத் தூண்கள் எழுப்பப்பட்டு, அவை மெட்ரோ நிலையங்களின் தடுப்புச் சுவர்களில் தாங்கப்பட்டு, சாலையின் குறுக்கே இணைக்கப்படும்.

    Advertisement

    மையத் தூண்களில் 30 மீட்டர் இடைவெளியில் ஸ்பேன்கள் அமைக்கப்பட்ட நிலையில், புதிய போர்டல் முறையில் 11 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து ஸ்பேன்களைப் பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் கூடுதல் நிதிச் சுமை ஏற்படாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு தற்போது 2027 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அவதிப்படும் வாகன ஓட்டிகள்

    நந்தனம் - தேனாம்பேட்டை வழித்தடத்தில் கடந்த பல மாதங்களாகப் பணிகள் மந்தகதியில் உள்ளதால், அண்ணா சாலையில் இயக்கப்படும் வாகனங்கள் தியாகராய நகர் போக் சாலை, விஜயராகவா சாலை மற்றும் செனடாப் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. மாற்றுப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களும் நெரிசலும் பொதுமக்களைக் கடுமையான அவதிக்குள்ளாக்கியுள்ளது.

    Advertisement

    ஒரு காலத்தில் மதுரவாயல் திட்டம் முடங்கி சென்னை புறநகர் மக்கள் தவித்தது போல, அண்ணா சாலைப் பணிகளும் காலவரையின்றி இழுத்தடிக்கப்படாமல், புதிய மாற்றங்களை விரைந்து செயல்படுத்தி பாலத்தைத் திறக்க வேண்டும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Another Maduravoyal in Making? Anna Salai Flyover Misses Deadline Amid Major Design Snag