சென்னை: இன்றைக்கு லஞ்சத்தைக் கைகளில் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து, பெரும்பாலான லஞ்சப் பேர்வழிகள் யுபிஐ (UPI) மூலம் வாங்குகிறார்கள். இப்போது இதுவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கூகுள் பே, பேடிஎம், போன்பே, அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு யுபிஐ வழிகளாக லஞ்சம் வாங்குகிறார்கள். இதற்குச் கடிவாளம் போடும் வகையில், 'டிஜிட்டல்' பணப்பரிமாற்றத்தை வங்கி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்குவதை எதிர்த்து நின்றால், சில அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பதுடன், அது தங்களது உரிமை என்று மிரட்டும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்று ஏட்டில் எழுதப்பட்டிருந்தாலும், லஞ்சம் கொடுத்தால்தான் உடனே வேலை நடக்கும் என்ற சிவப்பு நாடா முறையின் (Red Tapism) காரணமாக மக்களுமே அதற்குப் பழகிக்கொண்டு விட்டார்கள். இதனால் லஞ்சம் வாங்கும் சில அரசு ஊழியர்கள் ராஜவாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களின் சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பரிவர்த்தனைகள் குறித்துக் கண்காணிக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் லஞ்சம் ஒழிக்க முடியாத மூட்டைப்பூச்சியாக இருப்பதற்குக் காரணம் பொதுமக்கள்தான். வரிசையில் பலர் இருக்கும்போது, முந்திச் சென்று வாங்க நினைப்பார்களே, அதுபோல நமக்குத்தான் அரசு ஊழியர்கள் உடனே வேலை செய்து தர வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். ரயில்வே கேட்டில் பலர் காத்திருக்கும்போது, 'நான் முதலில் சென்றுவிட வேண்டும்; மற்றவர்கள் கேட்டில் மாட்டினால் என்ன, மாட்டாவிட்டால் என்ன' என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். அந்த ஒழுங்கீனம்தான் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க முதன்மைக்காரணம் என்று கூறப்படுகிறது. சிக்னல் போட்டாலும் கண்டுகொள்ளாமல் சென்று முன்னேற முயற்சிப்பார்கள்; அந்த மனநிலையும் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்கக் காரணமாக இருக்கிறது. அரசு ஊழியர்களைவிட மக்களே லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்க நினைக்கிறார்கள். ஒருவர் பட்டா வாங்கச் சில அடிப்படை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், அவர் எதுவுமே செய்யாமல் அரசு ஊழியருக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பட்டாவைக் கேட்கிறார். லஞ்சம் வாங்கியவுடன் முதல் ஆளாகப் பட்டாவை அவருக்குத் தயார் செய்து, அவரது வீட்டிற்கே சென்று தருகிறார் அந்த அரசு ஊழியர். இதனால் மற்றவர்களுமே அதே பாணியில் லஞ்சம் கேட்கத் தொடங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அரசு ஊழியர்களுமே லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரத் தொடங்கினார்கள்; இதுதான் இன்று வரை தொடர்கிறது. இப்படியான சூழலில் லஞ்சத்தை அடியோடு ஒழித்துக்கட்ட 'வாட்ஸ்-அப்' செல்போன் எண் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. புகார் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. என்னதான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தாலும் லஞ்சம் வாங்குவது குறையவே இல்லை. இதற்குக் காரணம் டிஜிட்டல் பரிவர்த்தனைதான். 'கையில் வாங்கினால்தானே கைது செய்வார்கள்; அதனால் ஜிபேயில் அனுப்புங்கள், அதுவும் என் ஜிபே கணக்கிற்கு வேண்டாம், நான் சொல்லும் ஜிபே கணக்கிற்கு அனுப்புங்கள்' என்று வாங்குகிறார்களாம். இதன் மூலம் அவர்கள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான லஞ்சப் பேர்வழிகள் 'டிஜிட்டல்' பணப்பரிமாற்றம் மூலம் லஞ்சப் பணத்தைக் கைமாற்றிக்கொள்வதை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதற்குப் பூட்டு போடும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வங்கி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு ரகசியமாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும், லஞ்ச ஒழிப்பு போலீசாரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்.. அமல்ராஜுக்கு கூடுதல் பொறுப்பு!