சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில் சிக்கியது. ஏ.ஆர்.அமீன், அவரது நண்பருடன் கோயம்பேட்டில் இருந்து வந்த கார், எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அனைவரும் தப்பினர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். குழந்தையிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமான ஏ.ஆர்.அமீனுக்கு, 2015ஆம் ஆண்டு ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலா யா சல்லி வசல்லிம் எனும் பாடல் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து தன் தந்தை ஏஆர் ரஹ்மானின் இசையில் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பாடியுள்ளார். மேலும் தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஏ.ஆர்.அமீனின் கார் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியது. ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பருடன் கோயம்பேட்டில் இருந்து வந்த சொகுசு கார், எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியது. இந்த விபத்தில் ஏஆர் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பி உள்ளனர்.