SIRக்கு பின் தேர்தல் நேர்மையாகத்தான் நடந்ததா? அம்பலமான முறைகேடுகள்! கேட்கவே பகீர்ன்னு இருக்கே

  • சென்னை: இந்தியாவில் SIR நடவடிக்கைகளுக்கு பின் தேர்தல்கள் நேர்மையாகத்தான் நடந்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முக்கியமாக அடுத்தடுத்து எழும் கடுமையான புகார்கள், விமர்சனங்கள் காரணமாக தேர்தல்கள் மீதே கேள்விகள் எழுந்துள்ளன.

    Advertisement

    தேர்தல் ஆணையம் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் புகார்கள் என்னென்னெ? அதற்கான ஆதாரங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    1. ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு இருக்கும் ஆகப்பெரிய ஆயுதம் அவனுடைய 'வாக்குரிமை' மட்டுமே. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்களை மாற்றவும், தங்கள் உரிமைகளைக் கேட்கவும் வாக்களிக்கும் உரிமையே அடிப்படை. ஆனால், அந்த வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடக்கும் விவகாரங்கள், நாட்டின் ஜனநாயகத்தின் மீதே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன.

    'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்ட அதிரடி புலனாய்வு அறிக்கை, தேர்தல் ஆணையத்தின் மோதலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தேர்தல் ஆணையத்தில் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களில் இருவர், கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்கள் எதிர்ப்புகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

    Advertisement

    இது ஏதோ அரசு அலுவலகத்தில் நடக்கும் சாதாரண அதிகாரப் போட்டி அல்ல.. நாட்டில் யார் வாக்களிக்கலாம், யாருடைய வாக்கு நீக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறைகளில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR) மட்டும் சுமார் 13 கோடிப் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் தகுதியான பல வாக்காளர்களின் பெயர்களும் அமைதியாகக் களையெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சமே இச்சிக்கலின் மையப்புள்ளி ஆகும்.

    புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் சிக்கல்:

    ஒரு இளைஞர் அல்லது பொதுமகன் முதல்முறையாக வாக்காளர் அட்டையைப் பெற 'பாரம் 6' (Form 6) விண்ணப்பத்தை நிரப்புகிறார். ஆனால், "உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்தார்களா?" என்ற தேவையற்ற ஒரு புதிய கேள்வியை அனுமதி இன்றி மென்பொருளில் சேர்த்துள்ளனர். இதற்கு ஆணையர்களே எதிர்ப்பு தெரிவித்தும் அதை நீக்கவில்லை. இதன் விளைவாக, சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த எளிய இளைஞர்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்வதே தடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

    Advertisement

    உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரம் பறிப்பு:

    பொதுவாக ஒரு பகுதியில் உள்ள வட்டாட்சியர் அல்லது வருவாய்க் கோட்டாட்சியர் (ERO) போன்ற உள்ளூர் அதிகாரிகள்தான் களத்தில் இறங்கி வாக்காளர்களைச் சரிபார்ப்பார்கள். ஆனால், அந்த அதிகாரிகளின் கணினி அனுமதியைக் குறைத்துவிட்டு, ஒட்டுமொத்த வாக்காளர் விவரங்களையும் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். உள்ளூர் உண்மை நிலை தெரியாமல், டெல்லியில் உள்ள ஒரு கணினி மென்பொருள் பட்டனைத் தட்டி ஆயிரக்கணக்கான சாமானியர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய முடியும் என்ற நிலை உருவானது.

    தகுதி இருந்தும் மறுக்கப்பட்ட வாக்குரிமை:

    உதாரணமாக, கோவா மாநிலத்தில் 97 வாக்காளர்களுக்கு எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும், தலைமை அலுவலக மென்பொருளில் அதற்கான அனுமதி வழங்கப்படாததால், அவர்களுடைய பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டுப்போயின. 97 பேர் என்பது சிறிய எண்ணிக்கையாகத் தோன்றலாம்; ஆனால் ஆவணங்கள் சரியாக இருந்தும் ஒரு குடிமகனின் வாக்குரிமை மென்பொருள் குளறுபடியால் பறிபோகிறது என்றால், அது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

    Advertisement

    2. இந்திய தேர்தல் ஆணையத்தை உலுக்கி வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) விவகாரத்தில், நாட்டை அதிரவைக்கும் புதிய தகவல் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) கேட்ட கேள்வி என்ன?

    இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை அறிய, பிரபல சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் அதிகாரப்பூர்வ மனுக்களைத் தாக்கல் செய்தனர்,

    "நாடு முழுவதும் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை (SIR) மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த கோப்புகள் மற்றும் உத்தரவு நகல்களை வழங்க வேண்டும்" என்பதே அந்த மனுவின் கோரிக்கை.

    மனுவுக்குத் தொடக்கத்தில் சரியான விளக்கம் கிடைக்காததால், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரியான தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளரிடம் சென்றது.

    தேர்தல் ஆணையம் அளித்த பதில் என்ன?

    மேல்முறையீட்டு அதிகாரியான தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அளித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ பதில் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது பதிலில்

    "நாடு தழுவிய அளவில் 2025-ல் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை தொடங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை மனுதாரருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்."

    இதன் பொருள் என்னவென்றால், நாடு முழுவதும் SIR நடைமுறையைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு முடிவை தேர்தல் ஆணையம் முறைப்படி அங்கீகரிக்கவே இல்லை; எனவே அதற்கான எந்தவொரு கோப்பும் ஆணையத்தின் பதிவேடுகளில் இல்லை!

    ஆணையமே முடிவெடுக்கவில்லை என்றால் உத்தரவிட்டது யார்?:

    ஒரு அமைப்பின் முதன்மை அதிகாரிகளான மூன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டாக அமர்ந்துதான் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். ஆணையமே அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால், நாடு முழுவதும் இவ்வளவு பெரிய திருத்தப் பணியைத் தொடங்க உத்தரவிட்டது யார்?

    3. கர்நாடக மாநில வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் போது, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து மொத்தமாக நீக்க முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், முன்பே அச்சிடப்பட்ட போலி 'பார்ம்-7' விண்ணப்பங்கள் மூலமாக முஸ்லிம் வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    'பார்ம்-7' என்றால் என்ன?

    தேர்தல் விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயர் தவறாக இருந்தாலோ, அல்லது அவர் இறந்துவிட்டாலோ, வேறு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டாலோ அவரது பெயரை நீக்கக் கோரி அளிக்கப்படும் படிவமே 'பார்ம்-7' ஆகும். ஆனால், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வசித்து வரும் உயிருடன் இருக்கும் வாக்காளர்களை "இங்கு வசிக்கவில்லை" எனக் கூறி நீக்க இந்த படிவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    15 ஆண்டு முகவருக்கே நேர்ந்த அதிர்ச்சி

    பெலகாவி வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 196-வது வாக்குச்சாவடியான வீரபத்ரா உருது மாதிரிப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக வாக்குச்சாவடி நிலை முகவராக (BLA) பணியாற்றி வருபவர் மீர்சாப் சனதி. இவர் அதே பள்ளியின் தலைவராகவும் உள்ளார்.

    கடந்த வாரம் பள்ளிக்குச் சென்ற அவர், அங்கு சுமார் 380 பார்ம்-7 விண்ணப்பங்கள் குவிந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். காரணம், அந்தப் பட்டியலில் அவருடைய பெயர், அவரது சகோதரர் பெயர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்தன. தலைமுறையாக அங்கேயே வசித்து வரும் தங்களது பெயர்களை யாரோ திட்டமிட்டு நீக்க மனு அளித்திருப்பது அவருக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.

    போலி அதிகாரிகள் கொடுத்த அழுத்தம்: வாக்குச்சாவடிகளில் நடந்தது என்ன?

    பெலகாவி வடக்கு தொகுதியில் உள்ள வீரபத்ரா நகரின் நான்கு வாக்குச்சாவடிகள் (பகுதி 194, 195, 196, 199) மற்றும் செட்டிகல்லியில் உள்ள அரசு கன்னட உயர் தொடக்கப் பள்ளியின் இரண்டு வாக்குச்சாவடிகள் (பகுதி 209, 210) என மொத்தம் ஆறு வாக்குச்சாவடிகளில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இப்படி தொடர்ச்சியாக அம்பலம் ஆகும் முறைகேடுகள் காரணமாக.. இந்தியாவில் SIR நடவடிக்கைகளுக்கு பின் தேர்தல்கள் நேர்மையாகத்தான் நடந்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    English Summary

    Are elections happened fairly in India after SIR: ECI Internal Rift Explained