சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ அமைப்பு தனது விரிவான விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறை நடத்திய விசாரணையின் முடிவுகளையே உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதால் வழக்கில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ஏற்று விசாரித்து வரும் சிபிஐ, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன், அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பொன்னை பாலு, அருள், ராமு, திருவேங்கடம் உள்பட 10 பேருக்கு கொலையில் நேரடித் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றவர்கள் என்பது புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 30 பேரில் இதுவரை 26 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கொலையில் நேரடியாக ஈடுபடாத மற்ற நபர்கள், கொலைக்குத் தேவையான ஆயுதங்களை ஏற்பாடு செய்தது, நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது, வாகனம் மற்றும் பண உதவி செய்தது போன்ற பின்னணி சதித் திட்டங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் என்பவர், இச்சம்பவம் நடப்பதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அருள் மற்றும் திருவேங்கடத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான முக்கிய ஆவணங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள், மற்றும் தடயவியல் ஆய்வுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட உடனேயே, சென்னை பெருநகர காவல்துறை மிக விரைவாகச் செயல்பட்டு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்தது. பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இருப்பினும், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு மீது அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். உண்மையான குற்றவாளிகளை மறைக்க காவல்துறை முயற்சிப்பதாகவும், அரசு உண்மையை மூடி மறைப்பதாகவும் சிலர் பொதுவெளியில் பிரச்சாரம் செய்தனர். ஆனால், தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ நீதிமன்றத்தில் கொடுத்துள்ள அறிக்கை, தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை முழுமையாக வழிமொழிந்துள்ளது. காவல்துறை யாரையெல்லாம் முக்கிய குற்றவாளிகள் என்றும், எவரெல்லாம் ஆயுதம் கொடுத்து உதவினர் என்றும் அடையாளம் கண்டதோ, அதே நபர்களையே சிபிஐயும் தனது விசாரணையில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றவாளிகள் யார் என்பதை ஆராயாமல், அரசியல் லாபத்திற்காக மட்டுமே அவதூறு பரப்பியவர்களுக்கு சிபிஐயின் இந்த நிலை அறிக்கை தெளிவான பதிலாக அமைந்துள்ளது. அன்றைய திமுக அரசு தன் துறை மூலம் எடுத்த துரித நடவடிக்கைகளும், காவல் அதிகாரிகள் சேகரித்த ஆதாரங்களும் துல்லியமானது என்பதை சிபிஐ புலனாய்வு அமைப்பின் அறிக்கை நிரூபித்துள்ளது. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற மற்ற குற்றவாளிகளைப் பிடிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவும் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சிபிஐ கூறியுள்ளது. இந்த வழக்கு விரைவில் அடுத்த கட்ட விசாரணைக்கு வரவுள்ள நிலையில், உண்மை வெளிவந்து நீதியை நிலைநாட்டும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையை உறுதி செய்த சிபிஐ
அரசியல் விமர்சனங்களுக்கு கிடைத்த தெளிவு