சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த பாம் சரவணனை, அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராகவும், கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தென்னரசுவின் சகோதரராகவும் கூறப்படும் பாம் சரவணன், திருவள்ளூர் அருகே போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டிருந்த நாகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 9, 2025 அன்று காலமானார். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முந்தைய திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போதைய தவெக அரசு அதனை வாபஸ் பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளரும், 35க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவருமான பாம் சரவணனை, சென்னை புளியந்தோப்பு பகுதியில் வைத்து அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராகவும், கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தென்னரசுவின் சகோதரராகவும் கூறப்படும் பாம் சரவணன், திருவள்ளூர் அருகே போலீசாரிடம் சிக்கியுள்ளார். பாம் சரவணன் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், அவரை தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, தற்போது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் பாம் சரவணனின் பின்னணி மற்றும் அவருக்கு தொடர்புடைய குற்றச் சம்பவங்கள் குறித்து மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
தாதா நாகேந்திரன்
சிபிஐ விசாரணை
பாம் சரவணன்
சென்னை போலீஸ்