மின் வெட்டு: திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் ஷாக் தகவல்!

  • சென்னை: "பல்வேறு இடங்களில் செயற்கையாக வேண்டுமென்றே மின்வெட்டை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். செயற்கை மின்வெட்டை ஏற்படுத்தியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் சோலார், விண்ட் பவர் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

    Advertisement

    இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "மின் உற்பத்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் நிலவிய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் முதன்மை நோக்கம்.

    மின் உற்பத்திக்கான விண்ணப்ப செயல்முறைகள் இனி முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். 'எங்கேயுமே லஞ்ச லாவணியம் இருக்கக் கூடாது, எந்தவித குறுக்கீடும் இருக்கக்கூடாது' என்பதே முதலமைச்சரின் கொள்கை. அதற்கேற்ப, தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சுலபமாக்கப்படும்.

    முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு தொடர் நிகழ்வாக அடிக்கடி நடத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக முந்தைய அரசு மின்சார வாரியத்தில் பல்வேறு விதிமீறல்களைச் செய்துள்ளது. ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக, விதிகளையெல்லாம் மீறி பல டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இதற்கான ஆதாரங்களை சில நிறுவனங்கள் எங்களிடம் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தந்துள்ளனர். இத்தகைய முறைகேடுகள் காரணமாகவே கடந்த வாரம் அனைத்து டெண்டர்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, டெண்டர் கொள்கைகள் மறுமதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும், மின்சார வாரியம் தற்போது ரூ.2.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இடைத்தரகர்கள் மூலம் ஃப்ளை ஆஷ் வாங்குவது மற்றும் விண்ணப்பங்களில் கமிஷன் வாங்குவது போன்ற புகார்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னையில் சில இடங்களில் நிலவும் இரவு நேர மின்தடைப் பிரச்சனைகளைச் சரிசெய்ய வாரிய அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். பழைய ட்ரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்களை மாற்றும் பணிகள் கடந்த காலங்களில் சரிவர நடக்கவில்லை. தற்போது சி.இ (CE) லெவல் அதிகாரிகள் முதல் சேர்மன் வரை இரவு முழுவதும் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

    Advertisement

    மின்சார பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்ய 7 சிறப்பு ரோந்து வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரையில் மின்சார வாரிய அதிகாரிகளின் புகாரின்படி, யாரோ வேண்டுமென்றே ட்ரான்ஸ்ஃபார்மர்களை திறந்து வைத்து மின்தடை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

    அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கும் இது போன்ற சமூக விரோதிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களை கவனித்து வருகிறோம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    கோயம்புத்தூர் சம்பவத்தில் விசாரணையைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே நடந்த தனிப்பட்ட தகராறிலான கொலை வழக்கில், குற்றவாளிகள் 3 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் குட்கா மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிராகப் பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுகவினர் இன்னும் தங்களது ஆட்சிக்காலப் பெருமையிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் திமுகவின் தவறுகளுக்கு எதிராகப் பூத்களில் திரண்டு வந்து அளித்த தீர்ப்பின் மூலமே இந்த ஆட்சி அமைந்துள்ளது.

    இன்ஸ்டாகிராம் மூலமாகவோ அல்லது சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாகவோ இந்த ஆட்சி அமையவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியே வந்து கள நிலவரத்தைப் பார்த்துப் பேச வேண்டும்.

    அரசு பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், மின்சார வாரியத்தில் ஒரு வாரத்திற்குள் தேவையான அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இதன் நல்ல பலன்களை மக்கள் விரைவில் காண்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "Attempts are being made to bring disrepute to the government by deliberately and artificially orchestrating power outages in various locations. A complaint has been lodged with the police against those responsible for causing these artificial power cuts," stated Minister CTR Nirmal Kumar.