ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய்

  • சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், நிர்வாகத் துறை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

    Advertisement

    அது போல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சென்னை முன்னாள் காவல் துறை ஆணையர் அருண் லஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி மற்றும் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில்தான் இன்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக அருண் மீது விமர்சனம் இருக்கும் நிலையில் அவருக்கு விஜய் முக்கிய பதவியை ஒதுக்கியுள்ளார்.

    Advertisement

    ஏடிஜிபி அருணுக்கு முக்கியப் பதவி வழங்கியதற்கு தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இதற்கான முக்கியக் காரணங்கள்:

    பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை: கடந்த தேர்தல் நேரத்தில், தவெக தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள அப்போதைய சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் அனுமதி மறுத்ததாக தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    திமுக சார்பு முத்திரை: திமுக மேலிடத்தின் உத்தரவின்படியே விஜய் பிரச்சாரம் செய்ய அருண் முட்டுக்கட்டை போட்டார் என்றும், அவர் கடந்த திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி, சென்னை ஆணையர் எனப் பளபளப்பான பதவிகளை அனுபவித்த திமுக ஆதரவாளர் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

    Advertisement

    சவுக்கு சங்கர் விவகாரம்: திமுக அரசுக்கு எதிராகப் பேசி வந்த சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் மீது குண்டாஸ் உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்ததில் அருணுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதால், தவெக ஆட்சியில் இவருக்குப் பதவி தரக்கூடாது என்ற குரல்களும் பலமாக ஒலிக்கின்றன.

    நிர்வாக ரீதியான எதார்த்தம்: அதிகாரிகளின் நிர்பந்தம்

    இருப்பினும், காவல்துறை வட்டாரங்கள் இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் அணுகுகின்றன. இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் அதிகாரிகள் ஆளும் வர்க்கத்தின் வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டிய எழுதப்படாத விதி நடைமுறையில் உள்ளது.

    ஆட்சியாளர்களின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்தால் இடமாற்றம் போன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், பெரும்பாலான அதிகாரிகள் ஆளும் அரசுக்கு இணக்கமாகவே செயல்பட வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது. ஐபிஎஸ் அதிகாரி அருணும் இந்த நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டே செயல்பட்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    Advertisement

    விமர்சனங்கள் ஒருபுறமிருந்தாலும், அருண் ஒரு தேர்ந்த மற்றும் அதிரடியான காவல் அதிகாரி என்பதை அவரது கடந்தகால சாதனைகள் உறுதிப்படுத்துகின்றன:

    ரவுடிகள் ஒழிப்பு: சென்னையில் கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துகள் உச்சத்தில் இருந்தபோது சென்னை ஆணையராகப் பொறுப்பேற்ற அருண், "ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் பேசுவோம்" என்று அதிரடியாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாகப் பல ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் சென்னையின் சட்டம்- ஒழுங்கு சில நாட்களிலேயே கட்டுக்குள் வந்தது.

    மாநில அளவிலான நடவடிக்கைகள்: தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தபோதும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேரில் ஆய்வ கூட்டங்களை நடத்தி, குற்றச்செயல்களைக் குறைக்கப் பரவலான உத்திகளைக் கையாண்டார்.

    Advertisement

    முந்தைய கால உதாரணம்: சங்கர் ஜிவால் ஐபிஎஸ்

    அரசியல் முத்திரை குத்தப்பட்டு அதிகாரிகள் ஓரங்கட்டப்படுவதற்குச் சிறந்த உதாரணமாக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்-இன் நிலையை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

    அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக ஆதரவாளர் என்ற முத்திரையால் தகுதியும் திறமையும் இருந்தும் சங்கர் ஜிவால் பத்தாண்டுக் காலம் முக்கியப் பதவிகள் ஏதுமின்றி ஓரங்கட்டப்பட்டிருந்தார். பின்னர் திமுக ஆட்சி அமைந்ததும் அவருக்கு உச்சபட்ச பதவியான சட்டம்-ஒழுங்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதேபோன்றதொரு சவாலைத்தான் தற்போது அருணும் எதிர்கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் விஜய்யின் வியூகம்: ஏன் இந்த முடிவு?

    திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளும் தற்போது எதிர்க்கட்சிகளாக உள்ள சூழலில், தவெக அரசுக்கு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என்பது மிக முக்கியமான சவாலாகும். சிறிய குற்றச்சாட்டுகளைக் கூட எதிர்க்கட்சிகள் பெரிய விவகாரமாக மாற்ற வாய்ப்புள்ளதால், காவல்துறையைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்த அருண் போன்ற திறமையான அதிகாரிகளின் தேவை தவெகவிற்கு இருப்பதாக அதிகாரிகள் மட்டத்திலிருந்து முதலமைச்சருக்குப் பரிந்துரைகள் சென்றுள்ளன.

    தலைமைச் செயலக வட்டாரத் தகவல்: அருண் மீதான விமர்சனங்கள் மற்றும் அவரது திறமைகள் ஆகிய இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்த முதலமைச்சர் விஜய், கடந்த காலப் பாகுபாடுகளைப் புறந்தள்ளி, திறமையான அதிகாரிகளுக்குத் தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்கலாம் என்ற முற்போக்கான முடிவை எடுத்துள்ளார். இதன் அடிப்படையிலேயே, ஏடிஜிபி அருணுக்கு தவெக ஆட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க முதலமைச்சர் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.

    English Summary

    Amid the transfer of three IPS officers in Tamil Nadu, Arun IPS, who was earlier placed on the waiting list, has now been appointed as the Director of the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC).