சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் புகார் கொடுத்த போது சென்னை காவல் ஆணையராக இருந்த அருணும், தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணனும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இருவரும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதேபோன்று சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வீரமணி விவகாரத்தில் முதலில் கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ்ஸிடம் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் புகார் கொடுத்ததாக பேட்டி அளித்திருந்தார். கண்ணன், மகேஷ்குமாருடன் ரஞ்சன் பேசிய வாட்ஸ் ஆப் சாட்களையும் ரஞ்சன் வெளியிட்டிருந்தார்.
அது போல் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றே புகார் கொடுத்ததாக ரஞ்சன் குமார் கூறியிருந்தார். இந்த விவகாரங்கள் தற்போது வெளியே தெரிந்த நிலையில் அருணும் கண்ணனும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அருண் ஐபிஎஸ் தற்போது வண்டலூர் ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் ஏடிஜிபியாகவும், கண்ணன் கோவை மாநகர காவல் ஆணையராகவும் இருந்து வருகிறார்கள். ஜெம் கிரானைட் உரிமையாளர் 84 வயதான வீரமணி, சிறுமிகளுக்கு பரிசு பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த புகாரை 2024 ஆம் ஆண்டிலேயே தான் கொடுத்துவிட்டதாக ரஞ்சன் குமார் பேட்டி அளித்திருந்தார். முதலில் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக ரஞ்சன் குமார் மீது புகார் எழுந்த நிலையில் அதை மறுத்த அவர், புகார் கொடுத்ததே தான்தான் என்றார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வீரமணி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ தன்னிடம் கிடைத்தவுடன் வழக்கறிஞர்களிடம் சொல்லி ஒரு புகார் மனுவை தயார் செய்ய சொல்லி அதுகுறித்து புகார் அளித்த ஆதாரங்களுடன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது துணை ஆணையராக இருந்த கண்ணனை பார்த்தேன். அவரிடம் எல்லா ஆதாரங்களையும் கொடுத்தேன். கமிஷனரிடம் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார். இதையடுத்து 10 நாட்கள் கழித்து சென்னை விபச்சார பிரிவு துறை ஆய்வாளராக இருந்த மகேஷ்குமார், என்னை சந்திக்க வேண்டும் என்றார். அவர் என்னை பொதுவான ஒரு இடத்தில் சந்தித்து என்னிடம் இருந்த ஆதாரங்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து 10 நாட்கள் கழித்து என்னை தொடர்பு கொண்ட மகேஷ்குமார், பாதிக்கப்பட்ட சிறுமிகள் யாரையாவது தெரியுமா என கேட்டார். இப்படியே ஒவ்வொருவராக பாதிக்கப்பட்ட சிறுமிகள் குறித்து கேட்டனரே தவிர எனது புகாருக்கு யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இந்த நிலையில்தான் ரஞ்சன் சொன்ன தகவலின் அடிப்படையில் சென்னை ஆணையராக இருந்த அருணும், புகாரை பெற்ற கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வீரமணி விவகாரத்தில் ரூ 70 கோடி வரை பணப்பரிமாற்றம் சொல்லப்பட்ட நிலையில் இவர்கள் மீது நடவடிக்கையை தவெக அரசு எடுத்துள்ளது. ஏற்கெனவே சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு வேறு ஒரு வழக்கில் மாற்றப்பட்டு தவெக அரசு வந்ததும் அருணுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பணி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பதவியில் இருந்தும் சில நாட்களிலேயே அவர் தூக்கியடிக்கப்பட்டு ஊனமாஞ்சேரியில் காவலர் பயிற்சி பள்ளியின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஜெம் கிரைனைட் வீரமணி நடத்திய பாலியல் வன்முறைகள் குறித்த வழக்கை விசாரித்து ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை முடித்து வைப்பதாக அறிக்கை தாக்கல் செய்த காவல் உதவி ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.