இந்தி மருந்து சீட் அடிக்க உத்தரவிட்டதே திமுக ஆட்சி தான்.. ஆதாரங்களை அடுக்கிய அருண்ராஜ்

  • சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாக போகிறது. ஏராளமான சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் இந்தி மொழியில் மருந்து சீட் வழங்குவது சர்ச்சையானது. இந்தியை திணித்து தவெக மும்மொழியை ஊக்குவிப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த மருந்து சீட்டை அச்சிடுவதற்கான ஆணையே, கடந்த திமுக ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது என அமைச்சர் அருண்ராஜ் ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    கரூர் அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து சீட்களில், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை, மதியம், மாலை, இரவு ஆகியவற்றுடன் உணவுக்கு முன், உணவுக்கு பின் என்பவை இந்தியிலும் எழுதப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது. இருமொழி கொள்கையை தங்கள் நிலைப்பாடாக சொல்லிவிட்டு, தவெக அரசு இந்தியை திணிப்பதாக திமுக விமர்சனம் செய்தது.

    Advertisement

    இந்தி மருந்து சீட்

    திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "மாற்றம் நகி ஹெய். நாற்றம் ஹாய் ஹாய். இந்தி ஹாய் வொய் ஹாய். திஸ் இஸ் ஒன்மோர் துரோகம் ஹாய் ஹாய். தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல. முதலில் கரூர், இப்போது கோவையிலும் அதே நிலைமை" என்று விமர்சித்தார். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது.

    மறுபக்கம் வட மாநில தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். அவர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே இது அத்தியாவசியமானது. இது மொழி பற்றை திணிக்கும் இடமில்லை. நோயாளிகளின் பார்வையில் அணுக வேண்டும். என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை விசாரித்தது. அப்போது கடந்த திமுக ஆட்சியில் இருந்தே இந்த நடைமுறை இருப்பது தெரியவந்தது.

    Advertisement

    உண்மை என்ன

    கோவை அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மருந்து சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது தனியார் நிறுவனங்களின் ஸ்பான்ஸரில் மருந்து சீட் வழங்கப்பட்டது. அப்போதிருந்தே தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் மருந்து சீட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறையினர் அவசர ஆலோசனை நடத்தி, நேற்று இரவுடன் மருத்துவமனைகளின் இந்தி மொழியுடன் மருந்து சீட் வழங்க தடை விதித்தனர்.

    இதுகுறித்து சுகாதாத்துறை அமைச்சர் அருண்ராஜ் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில், "மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் திமுக. வெளுத்தது போலி நாடகத்தின் சாயம். எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்.

    Advertisement

    திமுக ஆட்சியில்

    உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.உண்மை நிலை என்ன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் 'காலை / மதியம் / இரவு' போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு (Seal) வழங்கப்படுவது வழக்கம்.

    கடந்த டிசம்பர் 2025-ல், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன! அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது திமுக ஆட்சியில்தான் - அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது! தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வார்ப்புருவை (Template) உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்?

    Advertisement

    வாய்மூடி கைகட்டி

    தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம். தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்ததே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ எந்த மாற்றமும் செய்யவில்லை.

    தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது. இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு 'தமிழ் மொழியில் மட்டுமே' விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    உடனடி நடவடிக்கை

    கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர் மூச்சாகக் கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம். பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்து பழகிப்போன திமுகவினர் இனிமேலாவது இதுபோல் மலிவான அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Hindi medicine prescription on Coimbatore and Karur Government hospital sparks controversy. Minister Arunraj slams DMK on this issue.