“நான் உயிரோடு இருக்கும்வரை 4 பேரும் ஒரே அறையில் இருக்கமாட்டோம்”- மாமியார் பேச்சுக்கு ரவி மோகன் பதில்

  • சென்னை: "நான் உயிருடன் இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒரே அறையில் இருப்பது ஒருபோதும் நடக்காது. சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையில் நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது" என ரவி மோகன் தெரிவித்துள்ளார். ரவி மோகனின் மாமியார் சுஜாதா, ரவி குழந்தைகளை பொது வெளியில் சந்திக்க வேண்டும் என நிபந்தனை விதித்த நிலையில் அவர் வ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருக்கிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மனைவியைப் பிரிந்த ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொண்டு வந்தார்.

    Advertisement

    இதனால் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டது. அண்மையில் ரவி மோகனை விட்டு பிரிவதாக கெனிஷா அறிவித்தார். இதையடுத்து ரவி மோகன் வேதனையுடன் அளித்த பேட்டியில், "நான் விவாகரத்து பெறும் வரை என்னுடைய நடிப்பில் படங்கள் வெளியாகாது" எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விவாகரத்து வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகனுக்கு குழந்தைகளை பார்க்க அனுமதி அளித்தும், அவர் மாதம் 3 லட்சம் ரூபாய் ஆர்த்தி ரவிக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், ரவி மோகனின் மாமியார் சுஜாதா அளித்த பேட்டியில், "நாங்கள் மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக மொத்தமாகக் கேட்கவில்லை. எங்கள் தலையில் அவர் வைத்துவிட்டுப் போன கடன்கள் நிறைய இருக்கின்றன. அதை அடைக்க முடியாமல் வீடு ஜப்திக்கு வரும் நிலை ஏற்பட்டு, வங்கியிலிருந்து நோட்டீஸ் கூட அனுப்பப்பட்டது.

    Advertisement

    கடந்த இரண்டு வருடங்களாகக் குழந்தைகளுக்கு அவர் எந்தச் சலுகையும் செய்யவில்லை. அவர் சாப்பாட்டிற்குக்கூடப் பணம் கொடுக்கவில்லை. சொந்தக் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியது தந்தையின் கடமைதானே? பள்ளிக் கட்டணம், சாப்பாடு, டியூஷன், ஸ்பெஷல் ஆக்டிவிட்டீஸ் என எதற்குமே அவர் பணம் தரவில்லை.

    குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருவருக்கும் சேர்த்து வருடத்திற்குப் பள்ளிக் கட்டணம் மட்டுமே 86 லட்சம் ரூபாய் வருகிறது. அந்த 86 லட்சத்தையும் அவரே செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆர்த்திக்கு மாதத்திற்கு 3 லட்சமும், மகன்கள் ஆரவுக்கு 1 லட்சமும், அயானுக்கு 1 லட்சமும் என மொத்தம் மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இது தவிர, குழந்தைகளின் டியூஷன், கராத்தே, டான்ஸ், செஸ் மற்றும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கான கட்டணங்கள் அனைத்தையும் அவரே செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கூட்டிப் பார்த்தால்தான் அந்தத் தொகை வருகிறதே தவிர, ஆர்த்தி தனியாக 40 லட்சம் கேட்கிறார் என்பது பொய்யான செய்தி.

    ஆர்த்தி, ஆரவ், அயான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய நான்கு பேரும் மாதத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரில் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரவி மோகன் வீட்டிற்கு குழந்தைகளை அனுமதிக்க முடியாது. அவர்கள் பொது இடத்தில் சந்திக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

    Advertisement

    இந்நிலையில் ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய அன்பான மக்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள். உண்மையான நண்பர்களாக என் பக்கம் நின்று ஆதரவளித்ததற்கு நன்றி. சிலர் நீதிமன்ற அவமதிப்புக்கு இணையான வழிகளில் தொடர்ந்து நடந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது. என்னைப் பொறுத்தவரை, நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை நாம் 4 பேரும் மீண்டும் ஒரே அறையில் ஒன்றாகப் பார்க்கவே மாட்டோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “As long as I am alive, the four of us staying in the same room will never happen. It is regrettable that some continue to conduct themselves in a manner that amounts to contempt of court,” stated Ravi Mohan. He made these remarks after his mother-in-law, Sujatha, stipulated that he must meet the children in a public place.