உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்.. திமுக கூட்டணியில் இணையும் முடிவில் கம்யூனிஸ்ட் கட்சிகள்? பின்னணி என்ன

  • சென்னை: உள்ளாட்சித் தேர்தலின் போதே திமுக கூட்டணியில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தவெக ஆட்சி மீது இரு கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்து வரும் சூழலில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் திமுக கூட்டணியில் இணையலாம் என்று கருதப்படுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்டவை தவெகவுடன் இணைந்தன. இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையின்றி ஆதரவு கொடுத்தாலும், கூட்டணியில் இணைய மறுத்துவிட்டன. அதற்கு கம்யூனிஸ்ட்களை கணக்கெடுக்க உத்தரவிட்டதும், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கியதும் முக்கிய காரணம்.

    Advertisement

    அதேபோல் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளருக்கு பதவி நீட்டிப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. இரு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தாலும், அவர்களின் வலிமையை அறிய இந்த இடைத்தேர்தல் உதவியதாக பார்க்கப்பட்டது.

    இந்த இடைத்தேர்தல் முடிவுக்கு பின் புதிய தலைமைச் செயலக போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் கையில் எடுத்தனர். இருப்பினும் தவெக தரப்பில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நிச்சயமாக தங்களுடன் கூட்டணி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீண்டும் திமுக கூட்டணிக்கே திரும்பும் முடிவுக்கு வந்துவிட்டதாக பேச்சுகள் வெளி வந்துள்ளன.

    Advertisement

    கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மாணவர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தவெக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாகவே கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டன. திமுக மீது எந்தவித விமர்சனங்களையும் பெரியளவில் வைப்பதில்லை.

    நொந்து போச்சா திமுக? அதிமுக, கம்யூனிஸ்ட் ஆபீஸில் காலி சேர்கள்.. டக்னு பனையூர் வந்த பிரபலம் யாருங்க

    கூட்டணியில் இல்லையென்றாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணு சிலை திறப்பு விழாவில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின், சிலையை திறந்து வைத்தார். அப்போது முதலே கம்யூனிஸ்ட் கட்சியை தவிர்த்து வேறு எந்த கட்சியையும் மீண்டும் திமுக கூட்டணியில் சேர்க்க கூடாது என்ற எண்ணம் உதயநிதி ஸ்டாலினுக்கு வந்துவிட்டது.

    Advertisement

    தற்போது திமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கருதப்படுகிறது. இது திமுகவுக்கு வாக்கு சதவிகித அளவில் பலம் கொடுக்காது என்றாலும், கொள்கை அளவிலும் தவெகவுக்கு எதிரான அரசியலுக்கும் உதவும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    As per sources CPI and CPM Likely to Rejoin DMK Alliance Ahead of Local Body Elections