சென்னை: ஏற்கனவே தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட களத்தில் குதித்து இருக்கும் நிலையில் கூடுதலாக டாஸ்மாக் பணியாளர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர். நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கும் நிலையில், தமிழக்தில் நாளை முதல் மது விற்பனை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார்.
சொன்னது போலவே டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார். இது பெண்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த அதிரடியாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். ஏற்கனவே மதுபானங்கள் இறக்கி ஏற்றும் கூலி, கடை வாடகை, கரண்ட் பில் என அனைத்தையும் அதிகாரிகள் தங்கள் தலையிலேயே கட்டணத்தை சுமத்தி வரும் நிலையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் தொகையை வாங்குவதாக டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது, அவர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் உயர் அதிகாரிகள் செய்யும் தவறுக்கு டாஸ்மாக் தொழிலாளர்கள் பலி கடா ஆக்கப்படுவதாகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தங்களை குற்றவாளிகள் போல சித்தரிப்பதா என்று அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். இது தொடர்பாக ஆயத்த மாநாடு ஈரோட்டில் நடந்திருக்கிறது. தொடர்ந்து பேசிய டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், பல ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை. அதிகபட்சம் 10,000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக பெறப்படுகிறது. ஆனால் அதிகம் சம்பாதிப்பவர்கள் போல டாஸ்மாக் ஊழியர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிமுக - திமுக அரசுகள் எங்களது பணி நிரந்தர கோரிக்கையை ஏற்க வில்லை. ஆனால் தற்போதைய அரசு டாஸ்மாக்கில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அதன் ஊழியர்களையும் கவனிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. எனவே டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலை முதல் வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் இயங்காது எனக் கூறியிருக்கின்றனர். இதனால் தமிழக முழுவதும் டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.டாஸ்மாக்
டாஸ்மாக் ஊழியர்கள்
ஆயத்த மாநாடு
காலவரையற்ற போராட்டம்
மதுபான விற்பனை