சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஆதவ் அர்ஜுனா சவால் விட்டதைத் தொடர்ந்து காரசார விவாதம் நடந்தது. தனித்து நின்று 50 தொகுதிகளில் ஜெயித்துக் காட்டுங்க என திமுகவிற்கு ஆதவ் அர்ஜுனா சவால் விட்ட நிலையில், ரோஷம் இருந்தால் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளை வெளியில் அனுப்புங்கள் என கே.என்.நேரு பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "நிறைய இடங்களில் திமுகவினர் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு நாங்கள் தான் காரணம், ஐ.யு.எம்.எல் வெற்றி பெற்றதற்கு நாங்கள்தான் காரணம், விசிக ஜெயிக்க நாங்கள் தான் காரணம் என்கிறார்கள்.
தவெக தனிப்பெரும் கட்சியாக நின்று 108 தொகுதியில் வென்றுள்ளோம். 23 கட்சி கூட்டணி இல்லையென்றால் திமுக 10 தொகுதிகளில் கூட ஜெயித்திருக்காது. சென்னையில் அந்த 2 தொகுதிகளில் கூட ஜெயித்திருக்க முடியாது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இல்லையென்றால் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர்ந்திருக்க முடியாது. நீங்கள் எதிர்க்கட்சியாக இங்கு அமர்ந்திருக்க காரணமே கூட்டணி தான். அடுத்த தேர்தலில் எங்களை மாதிரி திமுக தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்றுக் காட்டுங்கள் பார்க்கலாம்." என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடும் வகையில் பேசினார். ஆதவ் அர்ஜுனா பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த திமுக எம்.எல்.ஏ கோவி. செழியன், "ராஜீவ் காந்தி மறைவைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் தான் வென்றிருந்தது திமுக. பூஜ்யத்தில் இருந்து வந்தது திமுக. எதையும் எதிர்கொள்ள திமுக தயார்" என்று கூறினார். அதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு பேசுகையில், "திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால் தான் தவெக இன்று ஆட்சியில் இருக்கிறது. உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள். கூட்டணி கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு தனியாக நின்று ஆட்சி நடத்துங்கள்" எனக் காட்டமாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இங்கு ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த அடையாளம் உள்ளது. யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்துவிடும். தேர்தல் முடிவுக்குப் பின் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம்" என்றார். இதையடுத்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், 2024 லோக்சபால் திமுகவிற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் எனக் கூறினார். திமுகவால் காங்கிரஸ் வென்றது என்றும், காங்கிரஸ் தயவால் திமுக வென்றது என்றும் 2 கட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு பேசுகையில், "எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது திமுக என்றும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக தான் என்றும் கூறினார். அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியை திமுக ஆதரித்தது என்றார். இதையடுத்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் எனத் தெரிவித்து காரசார விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.