சென்னை: வாஸ்து மற்றும் ஜோதிடத்தின் மீது முதல்வர் விஜய் வைத்துள்ள நம்பிக்கை கிறிஸ்தவ அமைப்புகளிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுதொடர்பாக விஜய்க்கு நெருக்கமானவர்கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வாஸ்து என்பது சைன்ஸ் என்றும், அறிவியலின் மீது மட்டுமே முதல்வர் விஜய்க்கு நம்பிக்கை உள்ளது என்று கூறி இருக்கின்றனர்.
முதல்வர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜோதிட நம்பிக்கை காரணமாக தனது அலுவலகத்தையே தலைமைச் செயலகத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றி இருக்கிறார். அதேபோல் வெள்ளிக்கிழமை தோறும் பட்டி வேஷ்டி, சட்டை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு விஜய்யின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் தான் காரணம் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் வாஸ்து ஜோதிடம் மீது முதல்வர் விஜய்க்கு இருக்கும் அதீத நம்பிக்கை, கிறுஸ்துவ அமைப்புகளிடம் விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. அதாவது, ஜோதிடம் மற்றும் வாஸ்து ஜோதிடம் என்பதெல்லாம் இந்து மதத்தினரின் நம்பிக்கை. ஆனால், முதல்வர் ஜோசப் விஜய், கிறுஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அந்த மதத்தின் கோட்பாடுகளில் அதீத நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டவர். அப்படியிருக்கையில் இந்து மதத்தினரின் நம்பிக்கையை இவர் ஏன் பின்பற்ற வேண்டும்? அதில் ஏன் அழுத்தமான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்? ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கை என்பது பெரியாரின் தத்துவம். அந்த பெரியாரை கொள்கைத் தலைவராக கொண்ட கட்சியின் தலைவரான விஜய், வாஸ்து மீது மோகம் கொள்ளலாமா? என்றெல்லாம் கத்தோலிக்க கிறுஸ்துவ அமைப்புகளிடம் விமர்சனங்கள் எதிரொலிக்கின்றன. இந்த விமர்சனங்கள் குறித்து விஜய்க்கு நிழலாக இருப்பவர்களோடு தொடர்புடைய தவெகவினரிடம் பேசிய போது, ''வாஸ்து என்பது அறிவியல். அறிவியலோடு தொடர்புடைய விதிகளை வைத்தே மனையடி சாஸ்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் முன்னோர்கள். சாதாரன ஜோதிடத்தின் மீது இருக்கிற விமர்சனத்தை, வாஸ்து சாஸ்திரத்தோடு ஒப்பிட்டு விவாதிப்பதே தவறு. வாஸ்துவை ஜோதிடம் என்று சொல்லக்கூடாது. ஜோதிடத்தின் எல்லைக்குள் அதனை அடைக்கக்கூடாது. அது, ஜோதிடம் அல்ல.. வாஸ்து சாஸ்திரம். சாஸ்திரம் என்பது சைன்ஸ்! அதனால் வாஸ்து சாஸ்திரம் என்பது எந்த ஒரு மதத்தினர்க்கும் சொந்தமானதல்ல! அறிவியல் மீது முதலமைச்சருக்கு நம்பிக்கை இருக்கிறதே தவிர மதத்தின் மீது கிடையாது. அறிவியலை உள்ளடக்கியே வாஸ்துவின் விதிகள் உருவாக்கப்பட்டிருப்பதால் அதன் மீது நம்பிக்கை வைப்பது அறிவியலின் மீது நம்பிக்கை வைப்பது போன்றதுதான்'' என்று விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் தவெகவினரையே திகைப்படைய வைத்திருக்கிறது. - சிறப்பு நிருபர் எழில்