அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி

  • சென்னை: சமீபத்தில் வெளியாகியிருக்கும் திமுகவின் கள ஆய்வு அறிக்கை திமுக தொண்டர்களின் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "அதிகாரிகளின் ஆட்சியால் தோல்வி" என்ற அந்த அறிக்கையின் வரிகள், வெறும் அரசியல் அறிக்கை மட்டுமல்ல; அதுதான் இன்றைய கசப்பான எதார்த்தமான உண்மை! என்று திமுக நிர்வாகி ஞா.ஞானராஜ் என்பவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு சமுக வலைதளங்களில் திமுகவினரால் அதிகம் பகிரப்படுகிறது.

    Advertisement

    அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது: "சமீபத்தில் வெளியாகியிருக்கும் திமுகவின் கள ஆய்வு அறிக்கை திமுக தொண்டர்களின் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "அதிகாரிகளின் ஆட்சியால் தோல்வி" என்ற அந்த அறிக்கையின் வரிகள், வெறும் அரசியல் அறிக்கை மட்டுமல்ல; அதுதான் இன்றைய கசப்பான எதார்த்தமான உண்மை! ஒரு பேரியக்கம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரும்போது, அந்த ஆட்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்குக் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளுமே பாலமாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு நிலைமை தலைகீழாக மாறியிருப்பதை இந்த ஆய்வு அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

    Advertisement

    கட்சிப் பொறுப்புகளில் இல்லாத, ஆனால் பல தசாப்தங்களாகக் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. அனுபவத்தை விட அதிகாரமே மேலானது என்ற எண்ணம் தலைதூக்கியதன் விளைவு இது. கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளும், மக்களின் நியாயமான தேவைகளும் அதிகார வர்க்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. மக்களாட்சியில் அதிகாரிகளின் கைகள் ஓங்கும்போது, அது மக்களின் அதிருப்தியையே சம்பாதிக்கும்.

    திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் (MLAs), மூத்த அமைச்சர்களும் தங்களை தேர்ந்தெடுத்த மக்களை விட்டு மிகவும் விலகிச் சென்றுவிட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது. தேர்தலின் போது மட்டுமே மக்களைத் தேடிச் செல்வது, மற்ற நேரங்களில் எட்டாக்கனியாக இருப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

    Advertisement

    எதார்த்தமான உண்மை என்ன?

    அடிமட்டத் தொண்டர்களின் வியர்வையிலும், மக்களின் நம்பிக்கையிலும்தான் எந்தவொரு ஆட்சியும் அமைகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின் அதிகாரத்தை அதிகாரிகளிடமும், ஒரு சில தனிநபர்களிடமும் ஒப்படைத்துவிட்டு, அடித்தளமாக இருந்த தொண்டர்களையும் மக்களையும் மறந்துவிட்டால், அதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.

    தலைமை எவ்வளவுதான் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதைச் செயல்படுத்தும் களத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் சுணக்கம் காட்டினால், அதன் பாதிப்பு ஒட்டுமொத்த இயக்கத்தையும் பாதிக்கும்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு சேகரிக்க கிளம்பி வந்து... அங்கே பொதுமக்களைக் கட்டிப்பிடிப்பது, ரோட்டோரக் கடையில் தோசை சுடுவது, புரோட்டா போடுவது, டீ ஆத்துவது, வயலில் இறங்கி நாற்று நடுவது என போலி நாடகங்களை அரங்கேற்றுவதை முதலில் அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்.

    Advertisement

    இதையெல்லாம் பார்த்து ஏமாறுவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை.​தேர்தல் நேரத்தில் காட்டும் இந்த போலிப் பாசத்தை எல்லாம் தவிர்த்துவிட்டு, அதிகாரத்துக்கு வந்த பின்பும் இதேபோல மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று, அவர்களின் குறைகளைக் கேட்டு அரவணைத்துச் சென்றாலே ஒழிய எந்தவொரு கட்சியும் மக்களின் உண்மையான நம்பிக்கையைப் பெற முடியாது.​அதிகார வர்க்கத்தின் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரதிநிதிகள் மக்களை நோக்கி வர வேண்டும் என்பதுதான் இந்த கள ஆய்வு அறிக்கை உணர்த்துகிறது.

    மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து, தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளித்தால் மட்டுமே இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும். சுயபரிசோதனை செய்து, தவறுகளைத் திருத்திக் கொள்வதே அடுத்த கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும்! என்றும் திமுகவின் கடைக்கோடி தொண்டன் ஞா.ஞானராஜ்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    DMK udanpirappu Gnanaraj’s viral X post echoes party workers’ angst over a survey, slamming bureaucratic dominance for setbacks. He warns that ignoring grassroot loyalty for official power led to defeat.