சென்னை: பைக் டாக்சியால் எங்கள் வாழ்வாதாரமே போச்சு.. விதிகளை மீறி இயங்கும் பைக் டாக்சிகளால் தங்களுக்கு வாடகை எதுவும் கிடைப்பது இல்லை.. வண்டிகளுக்கு லோன் கூட கட்ட முடியாமல் தவிப்பதாக ஆட்டோ டிரைவர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். நாமக்கல் திருச்செங்கோட்டில் விதிகளை மீறி இயக்கப்பட்ட பைக் டாக்சிகளை சிறைப்பிடித்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஒப்படைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயக்க தடை விதிக்கப்படுவதாகவும், மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் இதனை மீறி இயக்கப்படும் பைக் டாக்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. நாங்கள் கையோடு பிடித்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை என ஆட்டோ டிரைவர்கள் வேதனை தெரிவித்தனர்.
ரேபிடோ செயலி வழியாக பைக்குகளை புக் செய்து பயணம் செய்வது நகரங்களில் தற்போது அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி அதற்கு அடுத்த நிலைகளில் உள்ள நகரங்களில் கூட ரேபிடோ சர்வீஸ்கள் தற்போது கிடைக்கின்றன. சொந்த பயன்பாட்டுக்காக பைக்குகளை வாங்கிவிட்டு அதை வாடகை வாகனம் போல இயக்குவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள், பைக் டாக்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் பைக் டாக்சி விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க இருப்பதாகவும் அதுவரை பைக் டாக்சிகளுக்கு தடை இருப்பதாகவும் மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு, சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தது. தமிழகத்தில் தடை இருப்பதாக அரசு கூறினாலும், வெறும் பெயரளவுக்கே இது இருப்பதாகவும், வழக்கம் போல ரேபிடோ பைக்குகள் இயக்கப்படுகின்றன. ஆனால், போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்று ஆட்டோ டிரைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். விதிகளை மீறி இயங்கும் பைக் டாக்சிகளால் தங்களுக்கு வாடகை எதுவும் கிடைப்பது இல்லை. இதனால், வண்டிகளுக்கு லோன் கூட கட்ட முடியாமல் தவிக்கிறோம் என்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோ டிரைவர்கள் வேதனையுடன் கூறுவதை பார்க்க முடிகிறது. சில இடங்களில் ரேபிடோ பைக் டாக்சி ஓட்டும் இளைஞர்களுக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இதற்கிடையே, நாமக்கலில் ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வந்தவர்களின் பைக்குகளை சிறைப்பிடித்த ஆட்டோ டிரைவர்கள், ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு கொண்டு சென்று அபராதம் விதிக்க வேண்டும் என்று வண்டிகளையும் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆர்டிஓ அலுவலகத்தில் பைக்குகளை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:- பைக் டாக்சியால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. திருச்செங்கோடு முழுவதும் 500 குடும்பங்களுக்கு மேல் ஆட்டோ ஓட்டுகிறோம். இதை நம்பிதான் எங்கள் பிழைப்பு ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் சட்ட விரோதமாக பைக்குகளை வாடகைக்கு இயக்குகிறார்கள். இதனால் பைக் டாக்சிகளை பிடித்து ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்து இருக்கிறோம். இரண்டு நாட்கள் முன்பு கூட பைக் டேக்சிகளை பிடித்து ஒப்படைத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபராதம் போடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. மீட்டிங்கில் இருக்கிறோம். கொஞ்சம் கழித்து வந்து பார்க்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்களா? என்று பார்ப்போம். நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அடுத்த கட்டமாக ஒரு அடையாள வேலை நிறுத்தம் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம்" என்றார்.பைக் டாக்சிகளுக்கு தடை
ஆட்டோ டிரைவர்கள் குற்றச்சாட்டு
அடையாள வேலை நிறுத்தம்