B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்!

  • இந்தியப் மக்கள் அமெரிக்க விசா கிடைக்கப் பல மாதங்கள், சில நேரங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. இந்த விசா தட்டுப்பாட்டு மற்றும் கால தாமதம் பிரச்சனைக்கு அதிரடித் தீர்வு காணும் வகையில், அமெரிக்க வெளியுறவுத் துறை (US State Department) ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.

    Advertisement

    அமெரிக்காவுக்கு சுற்றுலா அல்லது வணிகத்திற்காக செல்ல விரும்பும் இந்தியர்கள், கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவாக விசா அப்பாயின்ட்மென்ட் பெறும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும். அமெரிக்க வெளியுறவுத்துறை இதற்காக பிரீமியம் சேவை என்ற புதிய திட்டத்தை பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை விசா பெறும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

    Advertisement

    பிரீமியம் சேவை என்றால் என்ன?

    அமெரிக்க அரசு சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இந்த புதிய சேவையை கொண்டு வர உள்ளது. வழக்கமான விசா விண்ணப்ப செயல்முறையுடன் கூடுதலாக 750 டாலர் (சுமார் 64,000 ரூபாய்) செலுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரகங்களில் நேர்காணலுக்கான அப்பாயின்ட்மென்ட்டை 10 நாட்களுக்குள் பெற முடியும். இது விசா பதிவு மற்றும் அப்பாயின்ட்மென்ட் பெறுவதை வேகப்படுத்தும் வசதியை வழங்கும்.

    கூடுதல் கட்டணம் எவ்வளவு?

    வழக்கமான அமெரிக்க சுற்றுலா மற்றும் வணிக விசா (B1/B2) கட்டணம் 185 டாலர் ஆகும். இந்த பிரீமியம் சேவைக்கு விண்ணப்ப கட்டணம் தாண்டி, கூடுதலாக 750 டாலர் செலுத்த வேண்டும். இந்த கட்டண அமைப்பு வணிக மற்றும் சுற்றுலா விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம் விசா பெறும் நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பைலட் திட்டம் எப்போது தொடங்கும்?

    ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை இந்த திட்டம் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இந்த காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க தூதரகங்களில் மட்டும் இந்த வசதி கிடைக்கும்.

    இந்த முயற்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு நுழைவதற்கான சில கடுமையான விதிகளை தளர்த்தும் நோக்கில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே டிரம்ப் விதித்த பல்வேறு விசா கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களுக்கு என்ன பலன்?

    இந்தியாவில் B1/B2 விசா நேர்காணல்களுக்கு பெரும்பாலும் நீண்ட காத்திருப்பு நேரம் உள்ளது. இந்த புதிய பிரீமியம் சேவை அந்த காத்திருப்பை குறைத்து, விரைவாக விசா பெற உதவும். இதனால் இந்தியர்கள் அமெரிக்காவில் இருக்கும் தங்களுடைய பிள்ளைகள், பேர குழந்தைகளை விரைவாக பார்க்க முடியும். இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய தொழில்திபர்களுக்கு இந்த சேவை ஒரு வரபிரசாதமாக அமையும்.

    Advertisement

    இந்தியாவில் எந்த தூதரகத்தில் இத்தகைய சேவை கொண்டு வரப்படும் என்பதை விரைவில் அமெரிக்க அரசு அறிவிக்கும். சென்னை தூதரகத்தில் இந்த சேவை வந்தால் ஜாக்பாட் தான்.

    English Summary

    The US State Department is launching a premium visa service that lets Indian applicants secure tourist and business (B1/B2) visa appointments within 10 days by paying an additional $750 on top of the standard fee. அமெரிக்க வெளியுறவுத்துறை பிரீமியம் விசா சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 750 டாலர் செலுத்தினால் B1/B2 விசா அப்பாயிண்ட்மெண்ட்டை 10 நாட்களில் பெறலாம்.