சென்னை: மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான என்.வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தவெகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
Gentleman சேனலில் பேசியிருக்கும் சேகுவேரா, "ஒரு கருப்பு ஆடு இன்று சிக்கி உள்ளது.. ஊழல் நடவடிக்கையை பொறுத்தவரை, ஊராட்சி மன்றத் தலைவர் லஞ்சம் வாங்கி வீடியோ வெளியாகிவிட்டது.. இதன் மீது முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கியுள்ளார்...
இந்த சம்பவத்தை, 90களில் பாஜக அமைச்சராக இருந்த பங்கார லட்சுமணன், மறைமுகக் கேமரா மூலம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவத்தோடு நான் ஒப்பிடுகிறேன். லஞ்ச பணத்தை பங்காரு லட்சுமணன் வாங்கி வைப்பது, கேமராவில் பதிவாகி விட்டது.. வாஜ்பாய் ஆட்சியில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. அதுபோலவே தவெக ஊராட்சி மன்ற தலைவரும் பிடிபட்டுள்ளார். ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக, முதலமைச்சர் விஜய்யும், உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்பிறகுதான் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கியடித்துள்ளார்.. அதுமட்டுமல்ல பிற கட்சிகளை போல இழுத்தடிக்காமல், ஜெயலலிதா பாணியில் வேகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். பொதுவாக, திமுக அல்லது மற்ற கட்சிகளில் இதுபோன்ற ஊழல் சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்டவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க மாட்டார்கள், மாறாக, மாவட்டப் பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிப்பார்கள் அல்லது சஸ்பெண்ட் செய்வார்கள். ஆனால், விஜய் அவர்கள் ஜெயலலிதாவைப் போலவே, மிகக் கடுமையான முடிவாக அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியிருப்பது அவரது கோபத்தையும், நேர்மையையும் காட்டுகிறது. விஜய் நேர்மையாக இருந்தாலும், அவரை சுற்றியுள்ள 2ம் கட்ட தலைவர்கள் அப்படியில்லை.. இதனால் மிஸ்டர் கிளீன் என்ற விஜய்க்கு உள்ள பெயர் காலியாகிவிடும். அதேபோல, யாராவது லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.. இப்போது ஊராட்சி மன்ற தலைவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த ஆட்சி 10 வருடமாவது நிலைக்க வேண்டுமானால் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்.. எந்த அமைச்சர்களாக இருந்தாலும், அவர்கள் யாரையும் நம்பி மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சியில் "விஜய்" என்ற பிம்பம் மட்டுமே நிஜமானது. எனவே தவறு செய்தது யாராக இருந்தாலும், ஜெயலலிதாவைப் போல அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு, மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விஜய் இப்போதுதான் மெல்ல மெல்ல அரசியலை உள்வாங்க தொடங்கியிருக்கிறார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறி. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அவரது ஆட்சி ஆரோக்கியமான திசையில் பயணிக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.கருப்பு ஆடு சிக்கியது
ஜெயலலிதா பாணியில் தவெக ஆட்சி
மிஸ்டர் கிளீன் விஜய்