சென்னை: வங்கி ஊழியர்களின் தங்களின் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து வரும் 28 ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கும் வாரத்தில் 5 நாள் வேலை - 2 நாள் விடுமுறையை மத்திய அரசு ஒருபோதும் ஏற்காது என்றும், அதன் பின்னணி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
வங்கி ஊழியர்கள் தற்போது தொடர் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் வரும் 28 ம் தேதி தொடங்கி 29, 30 என்று மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களும் வங்கிகள் செயல்படாது.
அதற்கு பதிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளைமறுநாள்) வங்கிகள் செயல்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற உள்ளது. அதாவது தற்போது வங்கிகள் முதல் வாரம், 3வது வாரம், 5வது வார சனிக்கிழமைகளில் செயல்பட்டு வருகிறது. ஆனால் சனி, ஞாயிறு என்று வாரத்தில் 2 நாட்கள் வேலை வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை என வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தின் மூலமாக தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் தான் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படுமா? என்று மத்திய நிதித்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி முற்றிலுமாக மறுத்தார். இதுபற்றி அவர், ''கடந்த ஊதிய பேச்சுவார்த்தையின்போது வாரத்தில் நாள் என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. அது ஒருபோதும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இல்லை. அவர்கள் (வங்கி ஊழியர்கள் சங்கங்கள்) உண்மைகளை திரித்து கூறி வருகின்றனர். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி சேவை வழங்கும் முறை அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் அப்படி எதுவும் அரசிடம் இல்லை. இதனால் வங்கிகள் 5 நாட்கள் மட்டுமே செயல்பட அனுமதி கிடைக்காது'' என கூறியுள்ளார். இது வங்கி ஊழியர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி மாத இறுதியில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதால் பலருக்கும் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்றே சம்பளம் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.