பெங்களூர்: மக்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து சொகுசு வீடுகளில் துண்டு, உள்ளாடைகளை மொத்தமாக காயப்போட்டு அதன் அழகை பாழாக்குவதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த பெங்களூரைச் சேர்ந்த மால்யா கிருஷ்ணா, வெளியில் துணிகளைக் காயப்போடுவது நாம் வெட்கப்பட வேண்டிய பழக்கம் அல்ல; அது உண்மையிலேயே மிகச் சிறந்த மற்றும் அறிவுப்பூர்வமான முறையாகும். ஈரமான துணிக்குச் சூரிய ஒளி என்ன செய்கிறது என்பதிலிருந்து தொடங்குவோம். சூரிய ஒளியில் புறஊதாக் கதிர்கள் உள்ளன. இந்த UV கதிர்கள் துணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளின் டி.என்.ஏ-வை அழிக்கின்றன என்று கூறியுள்ளார்.
அக்ஷிதா நிலாப் என்பவர் அண்மையில் அடுக்குமாடி வீடுகளின் பால் கனியில் துணி காயப்போடுவது குறித்து கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் கூறுகையில், "மக்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து சொகுசு வீடுகளை வாங்குகிறார்கள். மாதக் கணக்கில் வீடு எப்படி எல்லாம் வரும் என்ற வரைபடங்களை ஆராய்ச்சி செய்கிறார்கள். இறுதியாக கடல் வியூ தெரிகிறதா.. சிட்டி வியூ தெரிகிறதா, லேக் வியூ தெரிகிறதா என்று விவாதிக்கிறார்கள். அதேபோல் இத்தாலிய மார்பிள், ஜெர்மன் சமையலறை, நேர்த்தியான வடிவமைப்பு என "உயர்தர வாழ்க்கைக்கான" விளம்பரப் படங்களைப் பார்த்து வியக்கிறார்கள். ஆனால், துணி துவைக்கும் நாள் வரும்போது மொத்த கதையும் மாறுகிறது!
கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த பிரமாண்டமான பால்கனிகள், வார இறுதியில் , சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கும் இடமான 'தோபி காட்' போல மாறிவிடுகின்றன. படுக்கை விரிப்புகள் தேசியக் கொடி போலப் பறக்கின்றன; குளித்துவிட்டு போட்ட துண்டுகளும், ஆடைகளும் பால்கனியில் கம்பீரமாகத் தொங்குகின்றன. கட்டடக் கலைஞர் எவ்வளவு பிரமாண்டமாக வடிவமைத்திருந்தாலும், அங்கு வாழும் மக்கள் அதைத் தங்களின் இந்திய நடைமுறைப் பாணிக்கு ஏற்ப மாற்றிவிடுகிறார்கள்!" என்று கூறியிருந்தார். இதற்கு பலரும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த மால்யா கிருஷ்ணா என்பவர் வெளியிட்டபதிவில் கூறுகையில், "அந்தக் கட்டிடம் டிசைனில் தோல்வி அல்ல! இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை நான் விளக்குகிறேன். ஏனெனில், வெளியில் துணிகளைக் காயப்போடுவது நாம் வெட்கப்பட வேண்டிய பழக்கம் அல்ல; அது உண்மையிலேயே மிகச் சிறந்த மற்றும் அறிவுப்பூர்வமான முறையாகும். ஈரமான துணிக்குச் சூரிய ஒளி என்ன செய்கிறது என்பதிலிருந்து தொடங்குவோம். சூரிய ஒளியில் புறஊதாக் கதிர்கள் (UV Rays) உள்ளன. இந்த UV கதிர்கள் துணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளின் டி.என்.ஏ-வை அழிக்கின்றன. மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் குடிநீரைக் கிருமி நீக்கம் செய்ய UV ஒளியே பயன்படுத்தப்படுகிறது. எனவே, துண்டுகளையும் படுக்கை விரிப்புகளையும் நல்ல வெயிலில் காய வைப்பது கிருமிநாசினிக்குச் சமம். இரண்டாவதாக, சூரிய ஒளி ஒரு மென்மையான வெளுப்பானாக செயல்படுகிறது. துணியில் உள்ள கறைகள் மற்றும் மஞ்சள் கரைகளை உருவாக்கும் மூலக்கூறுகளைச் சூரிய ஒளி மெதுவாக உடைக்கிறது. அதனால்தான் வெளியில் காயப்போடும் வெள்ளை துணிகள் எப்போதும் வெண்மையாகவே இருக்கின்றன. துணி உலர்த்தும் எந்திரத்தால் (Dryer) இதைச் செய்ய முடியாது; அதில் வெப்பம் மட்டுமே உள்ளது. மூன்றாவதாக, வெயிலில் காய்ந்த துணிகளில் வரும் அந்தப் புதிய நறுமணம் உண்மையில் ஒரு வேதியியல் நிகழ்வு . சூரிய ஒளி ஈரமான துணியில் படும்போது, பூக்கள் மற்றும் புற்களில் காணப்படும் அதே போன்ற நறுமண மூலக்கூறுகளை உருவாக்கும் வினைகளைத் தூண்டுகிறது. விஞ்ஞானிகள் இதை ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். சொல்லப்போனால், எந்திரங்கள் இந்த இயற்கை நறுமணத்தைப் போலியாக உருவாக்கவே முயற்சிக்கின்றன. இறுதியாக, உலர்த்தும் எந்திரங்கள் உடைகளைக் பாழாக்குகின்றன. Dryer ஃபில்டரிலிருந்து நாம் அவ்வப்போது சுத்தம் செய்யும் பஞ்சு வேறு எதுவும் அல்ல; ஒவ்வொரு சுழற்சியிலும் நூலாகக் கிழிந்தெறியப்பட்ட நமது உடைகள்தான் அது. ஆனால், கொடியில் காயப்போடும் துணிகள் நீண்ட காலம் உழைக்கும். நமது நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 300 நாட்கள் நல்ல வெயில் கிடைக்கிறது. காலை 9 மணிக்குக் காயப்போட்ட சட்டை மதிய உணவுக்குள் தயாராகிவிடுகிறது. வானமே இலவசமாகச் செய்து முடிக்கும் ஒரு வேலைக்காக, மின்சாரத்தின் ஒவ்வொரு யூனிட்டும் குடும்ப வரவுசெலவில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு நாட்டில், ஒரு மணி நேரம் எந்திரத்தை இயக்குவது மிகப்பெரிய முட்டாள்தனம். வட ஐரோப்பா, கனடா மற்றும் வடக்கு அமெரிக்காவில் ஆண்டின் பெரும்பகுதி குளிர்ந்த, ஈரமான அல்லது இருண்ட வானிலையே இருக்கும். லண்டனில் நவம்பர் மாதத்தில் வெளியில் காயப்போடப்படும் ஒரு சட்டை இரண்டு நாட்களானாலும் ஈரமாகவே இருக்கும். வீட்டின் உள்ளே மெதுவாகக் காயும் துணிகள் பூஞ்சையை உருவாக்கும். அதனால் அங்கு Dryer என்பது ஆடம்பரம் அல்ல; அது ஆண்டின் பல மாதங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைக்கான தீர்வாகும். ஆனால் காலநிலை என்பது கதையின் ஒரு பகுதி மட்டுமே. ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் இந்தியாவைப் போலவே நல்ல வெயில் உள்ளவை. மறுபாதி கதை வரலாறு மற்றும் அவர்களின் அந்தஸ்து சார்ந்தது; இது மிகவும் சுவாரஸ்யமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, 1950-களில் "Live Better Electrically" போன்ற விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் அமெரிக்காவில் Dryer எந்திரங்கள் பரப்பப்பட்டன. மின்சார சாதனங்களே நவீன வீட்டின் அடையாளம் என அவை விற்றன. அதன் பின்னணியில் இருந்த செய்தி எளிதானது: "எந்திரங்கள் தான் முன்னேற்றம்; கொடியில் துணி காயப்போடுவது ஏழைகள் செய்யும் வேலை." அந்தக் கருத்து அங்கு எவ்வளவு நன்றாக வேலை செய்தது என்றால், அது கடைசியில் சட்டமாகவே மாறியது! சுமார் 6 கோடி அமெரிக்கர்கள் Homeowners Associations அமைப்புகளின் கீழ் வாழ்கிறார்கள். இவை சட்ட அதிகாரம் கொண்ட குடியிருப்புச் சங்கங்கள். ஒரு கணக்கீட்டின்படி, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை வீட்டின் வெளியே கொடியில் துணி காயப்போடுவதைத் தடை செய்துள்ளன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன. 'தடை' என்றால், உங்கள் சொந்தப் பணத்தில் வாங்கிய பின்புறப் புல்வெளியில் ஒரு படுக்கை விரிப்பைக் காயப்போட்டால் கூட இந்தச் சங்கம் உங்களுக்கு அபராதம் விதிக்கும். ஓரிகான் மாநிலத்தில் ஒரு பெண் தன் துணிகளை வெயிலில் காயவைத்ததற்காகக் கிட்டத்தட்ட $1,000 டாலர் (சுமார் ₹83,000) அபராதம் செலுத்தினார்! ஏன்? வெளித்தோற்றம் மற்றும் வீட்டின் மதிப்பு குறைந்துவிடும் என்பதால்! வெளியில் தொங்கும் துணிகள் வறுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன; அது பக்கத்து வீடுகளின் மதிப்பைக் குறைத்துவிடும் என்று அண்டை வீட்டார் பயப்படுகிறார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? சுமார் 85% அமெரிக்க வீடுகளில் Dryer எந்திரம் உள்ளது. அமெரிக்காவின் குடியிருப்பு மின்சாரத்தில் சுமார் 6% தொகையை இந்த எந்திரங்களே உறிஞ்சுகின்றன. அதாவது ஆண்டுக்கு சுமார் 9 பில்லியன் டாலர் கட்டணம்! அதுமட்டுமன்றி, இந்த எந்திரங்களால் ஆண்டுக்கு 12,000-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்படுகின்றன. ஆம், Dryers வீடுகளையே கொளுத்துகின்றன! இந்தக் கதையின் சிறந்த பகுதி என்னவென்றால், அமெரிக்கா இப்போது மெதுவாகத் தன் தவறை உணர்ந்து பின்வாங்கி வருகிறது: அமெரிக்காவில் "Right to Dry" (காயவைக்கும் உரிமை) என்ற ஒரு இயக்கமே செயல்பட்டு வருகிறது. புளோரிடா, கொலராடோ, ஹவாய், மேய்ன் மற்றும் வெர்மான்ட் போன்ற மாநிலங்கள், கொடியில் துணி காயப்போடுவதற்கான தடைகளைச் செல்லாததாக்கிச் சட்டங்களை இயற்றியுள்ளன. சூரிய ஆற்றல் சட்டங்களின் கீழ் மேலும் பல மாநிலங்கள் இதை ஆதரிக்கின்றன. Dryer பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு வீட்டின் கார்பன் உமிழ்வை ஆண்டுக்குக் 2,400 பவுண்டுகள் குறைக்க முடியும். அதனால், அங்கிருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்திய பால்கனிகளில் தினமும் எளிதாகச் செய்யப்படும் இந்தச் செயலுக்கான சட்டப்பூர்வ உரிமைக்காக மாநிலம் மாநிலமாகப் போராடி வருகிறார்கள். சுருக்கமாக கூறினால் UV கிருமிநாசினி, இலவசச் சூரிய ஆற்றல், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு, நீண்ட காலம் உழைக்கும் துணிகள் மற்றும் சிறந்த நறுமணம்! எனவே, அந்த பால்கனியில் துண்டுகள் தொங்குவது முற்றிலும் சரியான இடத்தில்தான்!" இவ்வாறு மால்யா கிருஷ்ணா கூறினார்.இப்போது இதோடு இந்தியச் சூழலையும் சேர்த்துக் பார்ப்போம்:
இப்போது ஒரு சுவாரஸ்யமான கேள்வி: மேற்கத்திய நாடுகள் ஏன் இதைச் செய்வதில்லை?