ஆட்சியில் பங்கு தருவதற்கு எதிர்க்கட்சியாக கூட இருந்துவிடுவேன் என்றார் எடப்பாடி- கிருஷ்ணசாமி பேட்டி

  • சென்னை: "ஆட்சியில் பங்கு தருவதற்கு, எதிர்க்கட்சியாக கூட இருந்துவிடுவேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார். இதுதான் அவரது மனநிலை" என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், "ஆட்சியில் பங்கு தர அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. அதிகார பங்கீடு செய்துகொள்ள அவர் விரும்பவில்லை. அதிமுக கூட்டணியில் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் பதவி கேட்டோம்.

    Advertisement

    கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது 15 சீட்டுகளில் தொடங்கி 7 வரை வந்தோம். கடைசியாக பேசும்போது எங்களுக்கான எண்ணிக்கையை கூட குறைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், எங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என உறுதியளியுங்கள் என கோரினோம். ஆட்சியில் பங்கு தருவதற்கு எதிர்க்கட்சியாகக் கூட இருந்துவிடுவேன் என்றார் பழனிசாமி.

    இதுதான் அவரது மனநிலைமை. யாருடனும் அதிகாரத்தை பகிரமாட்டேன். எனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை, மற்றொருவருக்கு ஒரு கண் போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி இருந்தார். திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்ற கருத்துருவாக்கத்தை செய்ய எடப்பாடி பழனிசாமி தவறிவிட்டார்.
    ஆனால் திமுக தீயசக்தி, தான்தான் தூயசக்தி என விஜய் கருத்துருவாக்கம் செய்தார். அண்ணா, எம்ஜிஆர் என்று பெயரை சொல்வதை தவிர எந்த செயல்திட்டமும் விஜய்யிடம் இல்லை. தவெகவிடம் அடித்தளம் கிடையாது, தெளிவான நோக்கம் கிடையாது, லட்சியம் கிடையாது.

    Advertisement

    திமுகவை எதற்காக வீழ்த்த வேண்டும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி சரியான காரணத்தை சொல்லவில்லை. விஜய்யின் பலவீனத்தையும் அவர் சொல்லியிருக்க வேண்டும். அதில் பாஜகவும் சேர்ந்து தவறு செய்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததற்கு மறைமுகமாக பாஜகவும் காரணம் என்றும் சொல்லலாம். உண்மையை சொல்லப்போனால் முழு பொறுப்பையும் அவர்கள் தான் ஏற்க வேண்டும்.

    பாஜக பெற்ற 28 தொகுதிகளும் அதிமுக வெல்ல வாய்ப்பில்லாத தொகுதிகள். விஜய் ஆட்சிக்கு வந்ததற்கு பாஜகவே முழு பொறுப்பேற்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவிடம் எந்த செயல்திட்டமும் இல்லை. விஜய் அதிமுகவை பெருமளவில் ஊழல்வாதிகள் என்று விமர்சித்தார். இப்போது அவர்கள்தான் அந்த கட்சிக்கு அதிகளவில் இழுக்கப்படுகிறார்கள். வெற்றி பெற்று ஒரு மாதம் கூட ஆகாமல் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? இதற்கு விடை தெரியாமல் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Edappadi Palaniswami stated that he would rather remain in the opposition than share power. This reflects his mindset,” said Krishnasamy, leader of the Puthiya Tamilagam party.