சொதப்பிய விஜய் திட்டம்! கர்நாடகா, தெலங்கானா வரிசையில் தமிழ்நாட்டிலும் வெடித்த போக்குவரத்து சர்ச்சை!

  • சென்னை: ஒரு மக்கள் நலத்திட்டத்தை அறிவிப்பது எளிது.. ஆனால் கள எதார்த்தங்களை உணர்ந்து, பிற துறைகளைப் பாதிக்காத வண்ணம் அதை நடைமுறைப்படுத்துவதே ஒரு சிறந்த நிர்வாகத்திற்கு அழகு.

    Advertisement

    காந்தி ஜெயந்தியன்று தமிழக வெற்றிக் கழக அரசு அறிமுகப்படுத்திய 'வெற்றி பயணம்' திட்டம், இப்போது மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெண்களின் நலன் என்ற ஒற்றைக் கோணத்தில் பார்க்கும்போது இது வரவேற்பைப் பெற்றாலும், விரிவுபடுத்தப்பட்ட விதமும் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரமும் ஒட்டுமொத்த போக்குவரத்துச் சூழலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    Advertisement

    இது ஏதோ தமிழகத்தில் மட்டும் புதிதாக நடக்கும் பிரச்சனை அல்ல. பக்கத்து மாநிலங்களான கர்நாடகாவில் 'சக்தி' திட்டம், தெலங்கானாவில் 'மகாலட்சுமி' திட்டம், மற்றும் கேரளாவிலும் இதே போன்ற விரிவுபடுத்தப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது, தனியார் போக்குவரத்துத் துறை முடங்கி பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் 'விடியல் பயணம்' கொண்டுவரப்பட்டபோது இத்தகைய கொந்தளிப்பு ஏற்படாதது ஏன்?

    திமுகவின் 'விடியல் பயணம்': துல்லியமான திட்டமிடல்

    2021-ல் திமுக அரசு மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை அமல்படுத்தியபோது, அது மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டது

    வகைப்படுத்தப்பட்ட சேவைகள்: நகரங்களில் இயங்கும் சாதாரண கட்டண வெள்ளை போர்டு பேருந்துகளில் மட்டுமே இலவசம் என வரம்பிடப்பட்டது.

    Advertisement

    சமநிலை பாதுகாப்பு: விரைவுப் பேருந்துகள் (Express), டீலக்ஸ் (Deluxe), மற்றும் மாவட்டங்களுக்கு இடையே செல்லும் தொலைதூரப் பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் நகரங்களில் பெண்களுக்கு உதவி கிடைத்த அதே நேரத்தில், புறநகர் வழித்தடங்கள் மற்றும் கிராமப்புறங்களை நம்பியிருந்த தனியார் மினி பஸ்கள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கான பயணிகள் வட்டம் முழுமையாகச் சிதையவில்லை. ஒருபுறம் ஏழை எளிய பெண்களுக்கான சமூக நீதி, மறுபுறம் தனியார் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தினசரிப் பிழைப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நிர்வாகச் சமநிலையை திமுக அரசு பேணியது.

    தவெகவின் 'வெற்றி பயணம்': அரசியல் அவசரமும் நிர்வாக சறுக்கலும்

    ஆனால், தவெக அரசு கொண்டுவந்துள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தில் இந்தச் சமநிலை மொத்தமாக உடைக்கப்பட்டுவிட்டது. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், லிமிடெட் ஸ்டாப் (LSS), மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் பேருந்துகள் என 12,000-க்கும் மேற்பட்ட அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் எல்லையே இல்லாமல் இலவசம் என அறிவிக்கப்பட்டது. 40 கி.மீ-க்கும் மேற்பட்ட வழித்தடங்களிலும், மாவட்ட எல்லைகளைத் தாண்டும் பேருந்துகளிலும் இலவசம் வழங்கப்பட்டதால், கிராமப்புற மற்றும் புறநகர் வழித்தடங்களில் இயங்கிய தனியார் பஸ்களுக்குப் பயணிகள் வரத்து பூஜ்ஜியமானது.

    Advertisement

    பக்கத்து மாநில பாடங்களை மறந்த அரசு: கர்நாடகாவில் 'சக்தி' திட்டம் வந்தபோது, ஆட்டோ ஓட்டுநர்களும் தனியார் பஸ் உரிமையாளர்களும் பெங்களூருவை ஸ்தம்பிக்க வைத்த போராட்டங்களை நடத்தினர். தெலங்கானாவிலும் இதே அவசரகதி அறிவிப்பால் ஆட்டோ ஓட்டுநர்களின் தற்கொலைகள் வரை விவகாரம் சென்றது. இந்த எதிர்மறை விளைவுகளை முன்கூடடியே ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தவெக அரசு தவறிவிட்டது. தனியார் போக்குவரத்துத் துறைக்கு ஏதேனும் மாற்று நிவாரணம் உண்டா, டீசல் மானியம் தேவையா அல்லது குறிப்பிட்ட தூர வரம்புகள் வைக்கப்பட வேண்டுமா என்பது குறித்த எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படாமல் ஒரே நாளில் திட்டம் திணிக்கப்பட்டது.

    Advertisement


    களத்தில் எதிரொலிக்கும் தாக்கம்

    சரியான திட்டமிடல் இல்லாத இந்த முடிவால், இன்று இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஆட்டோ ஓட்டுநர்களும், தனியார் பஸ் ஊழியர்களும் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். கடன் தவணை கட்ட முடியாமலும், அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கு வழியின்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அரசியல் லாபத்திற்காக எவ்வித முன்யோசனையும் இன்றி எடுக்கப்படும் திட்ட விரிவாக்கம், எளிய மக்களின் இன்னொரு பிரிவினரின் வயிற்றில்தான் அடிக்கிறது என்பதற்குத் தற்போதைய 'வெற்றி பயணம்' திட்ட அமலாக்கக் குளறுபடிகளே நேரடி சான்றாக மாறியுள்ளது.

    English Summary

    Beyond City Limits: Why TN’s Unplanned Free Bus Expansion Sparked Karnataka-Style Transport Chaos