பாக்யராஜ் மறைவு.. இப்படியொரு செய்தி வரும்னு கனவில் கூட நினைக்கவில்லை.. சோகத்துடன் பேசிய நடிகை ஊர்வசி

  • சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மறைவு செய்தி வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். பாக்யராஜ் தான் மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய குரு என்று கூறிய ஊர்வசி, திடீரென இப்படியொரு செய்தி வந்திருப்பது எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்று கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், 'திரைக்கதை மன்னன்' என்று ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான கே.பாக்யராஜ் சென்னையில் இன்று காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த செய்தி, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    இன்று அதிகாலை அவரது இல்லத்தில் தூங்கிக்கொண்டிருந்த போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மறைந்த பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். பாக்யராஜின் குரு பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் சிஷ்யன் பாக்யராஜ் மறைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது.

    பாக்யராஜின் மறைவு குறித்து நடிகை ஊர்வசி பேசுகையில், இந்த செய்தியே நீங்கள் சொன்ன பிறகு தான் தெரியும்.. ஒரு மாதிரி பக்குனு இருக்கு.. ஒரு படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன்.. இப்போதான் செய்தி தெரிந்து ஒரு மாதிரியாக உள்ளது. 50 ஆண்டுகள் திரைப்பயண கொண்டாட்டம் இப்போதுதான் முடிந்தது. அந்த நிகழ்ச்சிக்கு மேக் அப் போடும் போதும் கூட பாக்யராஜ் முகமே நினைவுக்கு வந்தது.

    Advertisement

    பாண்டிராஜ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கூட வந்திருந்தார். கலகலனு பேசிக் கொண்டிருந்தோம். இப்படியொரு செய்தி வரும்னு கனவுல கூட நினைக்கவில்லை.. என்னவென்று சொல்வது.. எத்தனையோ மேடைகளில் இணைந்து பேசி இருக்கிறோம்.. என்னை மக்களுக்கு அறிமுகம் செய்த குரு அவர்.. அவரை மாதிரி ஒரு திரைக்கதை ஆசிரியர் இந்தியாவிலேயே வர முடியாது..

    எனக்கு என்னவென்றே புரியவில்லை.. அவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய இரங்கலை சொல்லிக் கொள்கிறேன்.. எனக்கு கொஞ்சம் நேரம் தேவை.. மீண்டும் பிறகு பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். பாக்யராஜ் - ஊர்வசி இணைந்து நடித்த முந்தானை முடிச்சு படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது.

    English Summary

    Bhagyaraj: "Never Imagined This in My Wildest Dreams" Actress Urvashi Mourns the Demise of Her Mentor K. Bhagyaraj