Bhagyaraj: கதை சொல்லும் கலையின் நாயகன் பாக்யராஜ்: திரைப்பயணத்தில் மறக்க முடியாத 10 திரைப்படங்கள்

  • சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் கதாசிரியரான கே. பாக்யராஜ், சென்னையில் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார். 73 வயதான அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாக்யராஜ் திரைப்பயணத்தில் முக்கிய இடம்பிடித்த 10 திரைப்படங்கள் குறித்து இங்கு காணலாம்.

    Advertisement

    இயக்குனரும், நடிகரும், மிகக் கூர்மையான வசனகர்த்தரும், தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னருமான கே பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இவரது மறைவு திரைத் துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள், நடிகைகள், திரைப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கே பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    பாக்யராஜ் மறைவு

    கடந்த 1953 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பிறந்தார் பாக்யராஜ். நடிகை பூர்ணிமாவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி திருமணம் செய்தார். இயக்குநர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்துறை வித்தகராக திகழ்ந்தார் பாக்யராஜ்.

    சுமார் 48 ஆண்டுகளில் 75 படிங்களில் நடித்துள்ளார். முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா உள்ளிட்ட 25 படங்களை இயக்கியுள்ளார். 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே படத்தில் தொடங்கி 2025 ஆம் ஆண்டு வெளிவந்த குபேரா படம் வரை பல்வேறு படங்களில் பாக்யராஜ் நடித்துள்ளார். சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார்.

    Advertisement

    பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளனர். இது நம்ம ஆளு திரைப்படம் மூலமாக எழுத்தாளர் பாலகுமாரனை இயக்குநர் ஆக்கிய பெருமையும் பாக்யராஜையே சாரும். பாக்யராஜின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத 10 திரைப்படங்கள் குறித்து இங்கு காணலாம்.

    பாக்யராஜின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத 10 திரைப்படங்கள்

    சுவர் இல்லாத சித்திரங்கள்

    பாக்யராஜ் இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. சுதாகர், சுமதி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் காதலைத் தாண்டி, அக்கால இளைஞர்களின் கனவுகள், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பசி போன்ற சமூக யதார்த்தங்களையும் பதிவு செய்தது.

    Advertisement

    பாக்யராஜின் இயல்பான நடிப்பும், கவுண்டமணியின் நகைச்சுவையும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்தன. கங்கை அமரன் இசையில் உருவான 'காதல் வைபோகமே' பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உணர்ச்சிகரமான இறுதிக்காட்சி, வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியது.

    முந்தானை முடிச்சு

    கிராமப்புற பின்னணியில் நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தீபா நடித்திருந்தனர். குழந்தையுடன் இருக்கும் பள்ளி ஆசிரியரை திருமணம் செய்ய ஒரு இளம்பெண் மேற்கொள்ளும் முயற்சிகளே கதையின் மையம். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. நடிகை ஊர்வசியின் அறிமுகப்படமாகவும் இது அமைந்தது.

    Advertisement

    இன்று போய் நாளை வா

    மூன்று நண்பர்கள் ஒரே பெண்ணை காதலிக்கும் கதையை நகைச்சுவையுடன் சித்தரித்த திரைப்படம். சாதாரண கிராமப்புற சூழலை இயல்பாக திரையில் கொண்டு வந்திருந்தார் பாக்யராஜ். நண்பர்களின் போட்டி, ராதிகாவின் நடிப்பு, நகைச்சுவை காட்சிகள் ஆகியவை இந்தப் படத்தை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்தன.

    அந்த 7 நாட்கள்

    பாலக்காட்டு மாதவன் மற்றும் வசந்தி ஆகியோரின் காதல், எதிர்பாராத திருமணம் மற்றும் தியாகத்தை மையமாகக் கொண்ட திரைப்படம். வசந்தி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்ட பிறகு, உண்மையை அறியும் கணவர் அவரை காதலருடன் சேர்க்க முயற்சிப்பதே கதையின் மையக்கரு. பாக்யராஜ் மற்றும் அம்பிகாவின் நடிப்பு, உணர்ச்சிகரமான வசனங்கள் ஆகியவை இந்தப் படத்தை காலத்தால் அழியாத படைப்பாக மாற்றின. இந்தக் கதையின் தாக்கத்தில் பின்னர் பல மொழிகளில் இதேபோன்ற படங்கள் உருவாகின.

    Advertisement

    ஒரு கை ஓசை

    பாக்யராஜின் இரண்டாவது இயக்குநர் முயற்சியான இந்தப் படம், பேச முடியாத இளைஞரின் காதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது. காதலுடன் சமூகத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளையும் திரைப்படம் பதிவு செய்தது. சங்கிலி முருகனின் கதாபாத்திரம் கவனம் பெற்றது. எம்.எஸ். விஸ்வநாதனின் இசையும், வித்தியாசமான கிளைமாக்ஸும் படத்திற்கு தனிச்சிறப்பை அளித்தன.

    மெளன கீதங்கள்

    ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், பிரிந்த வாழ்க்கை வாழும் கணவன்-மனைவியின் உணர்ச்சிப்பூர்வமான கதையைச் சொன்ன படம். பாக்யராஜ் மற்றும் சரிதாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கங்கை அமரன் இசையில் இடம்பெற்ற 'மூக்குத்திப் பூமேலே', 'மாசமோ மார்கழி மாசம்', 'டாடி டாடி' உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    சுந்தரகாண்டம்

    தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றும் ஒருவரை, அவரது மாணவி காதலிப்பதை மையமாகக் கொண்ட கதை. தவறான காதலை நிராகரித்து குடும்ப வாழ்க்கையை தேர்வு செய்யும் நாயகனின் முடிவும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களும் கதையை நகர்த்துகின்றன. நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் இணைந்த படைப்பாக இது அமைந்தது.

    சின்ன வீடு

    திருமண வாழ்க்கையில் ஏற்படும் மனநிலைகள், விருப்பமில்லாத திருமணம், உடல் தோற்றம் குறித்த பார்வைகள், திருமணத்துக்கு வெளியான உறவு போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு உருவான படம். கல்பனா, பாக்யராஜ் மற்றும் கோவை சரளாவின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. குடும்ப உறவுகளை வித்தியாசமான கோணத்தில் எடுத்துரைத்த திரைப்படமாக இது பார்க்கப்படுகிறது.

    டார்லிங் டார்லிங் டார்லிங்

    சிறுவயது காதல், காலப்போக்கில் நிகழும் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவான காதல் திரைப்படம். பூர்ணிமா மற்றும் பாக்யராஜின் நடிப்பு, 'அழகிய விழிகளில்' பாடல், வித்தியாசமான கிளைமாக்ஸ் ஆகியவை இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

    தூறல் நின்னு போச்சு

    கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் பாக்யராஜ், சுலோக்சனா, எம்.என். நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நம்பியாரின் மாறுபட்ட கதாபாத்திரம், செந்தாமரையின் வில்லத்தனம், 'தங்கச்சங்கிலி', 'ஏரிக்கரை பூங்காற்றே', 'என் சோகக் கதை கேளு' உள்ளிட்ட பாடல்கள் இந்தப் படத்தை ரசிகர்களின் மனதில் நிலைநிறுத்தின.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்து துறைகளிலும் தனித்துவமான முத்திரையை பதித்த பாக்யராஜ், தமிழ் சினிமாவில் புதிய கதை சொல்லும் பாணியை உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவராக இன்றும் மதிக்கப்படுகிறார். அவரது படங்கள் தலைமுறைகளைத் தாண்டியும் ரசிகர்களால் தொடர்ந்து ரசிக்கப்படும்.

    English Summary

    Bhagyaraj created several memorable films that transformed Tamil cinema with unique storytelling, realistic characters, and strong emotions. From Suvarillatha Chiththirangal to Thooral Ninnu Pochchu, these ten films remain celebrated classics among audiences and continue to influence filmmakers.