Spam mail-ஐ பாருங்க! என்னை மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்! பாரதிதாசன் உருக்கம்

  • சென்னை: என்னை மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசன் மீண்டும் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

    Advertisement

    இதுகுறித்து அந்த மாணவர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: சமூகநீதித் துறை வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

    Advertisement

    அவர்கள் அனுப்பிய பில்லுக்கு நான் பதில் அனுப்பவில்லை என கூறியிருக்கிறார்கள். நான் பதில் அனுப்பிவிட்டேன். பதில் அனுப்பவில்லை என சொல்வது தவறான தகவல். ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கான பில்லை மெயிலில் அனுப்பிவிட்டேன். அதற்கான ஆதாரம் இதோ (Sent Mail -களை காட்டுகிறார்)!

    அந்த பில்லுக்கான எல்லா தகவல்களையும் நான் அனுப்பிவிட்டேன். ஆனால் நான் பில் அனுப்பவில்லை என உங்கள் ஐடி விங்கை வைத்து எனது கனவை சிதைக்க பார்க்கிறீர்கள். நான் இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.

    எத்தனை பேர் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார்கள் என்பதை சமூகநீதித் துறை வெளியிட்டால் நன்றாக இருக்கும். மற்றவர்கள் படிப்பது முதுகலை படிப்பு, அவர்களுக்கு ஓராண்டுக்கான கல்லூரி கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால் ஆராய்ச்சி படிப்பு அப்படியில்லை, கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், புத்தக செலவு என 24 மணி நேரமும் ஆய்வை பற்றியே சிந்திக்க வேண்டும்.

    Advertisement

    இந்தியாவில் ஜேஆர்எஃப் என ஒரு தேர்வு உள்ளது. அதாவது Junior Research Fellowship Exam-ல் நான் தேர்ச்சி அடைந்து பிஎச்டி படிப்பு படிக்க இந்தியாவிலேயே கல்லூரிகள் கிடைத்தன. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தியாவில் ஏன் படிக்கவில்லை என என்னிடம் சிலர் கேட்டனர்.

    ஆனால் மலேசிய பல்கலைக்கழகத்தில் படித்தால் ஐஐடியில் பேராசிரியர் ஆகலாம். பெரிய ஒரு வாய்ப்பிருப்பதாக நினைத்து நான் இங்கு வந்தேன். ஜேஆர்எஃப் மூலம் கிடைத்த ஊதியத்தை விட்டுவிட்டு நான் அப்பா, அம்மாவை எல்லாம் மிகவும் கொடுமைப்படுத்திவிட்டேன்.

    ஊதியம் ஏதும் இல்லாமல் கல்விக்காக மட்டுமே மலேசியா வந்துள்ளேன். ஆனால் என் மீது மீண்டும் மீண்டும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது வருத்தமாக இருக்கிறது.

    Advertisement

    நீங்கள் 36 லட்சம் கொடுத்திருக்கிறீர்கள். அது முதலாமாண்டுக்கான பணம், 37 லட்சத்திற்கான பில்லை நான் உங்களுக்கு அனுப்பிவிட்டேன். பல்கலைக்கழகத்தின் மூலமாக கேட்ட தகவல்களையும் சமூகநீதித் துறைக்கு அனுப்பிவிட்டேன்.

    ஆராய்ச்சிக்கு உண்டான எல்லா பில்களையும் ஜூன் 8ஆம் தேதி அனுப்பிவிட்டேன். மீண்டும் அதற்கான விளக்கத்தையும் நான் கொடுத்துவிட்டேன். மீண்டும் மீண்டும் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழகம் அனுப்பிய அனைத்து ரசீதுகளையும் மெயில்களையும் அவர் வீடியோவில் காட்டியுள்ளார்.

    அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன், உதவித்தொகை இன்னும் வந்து சேரவில்லை என கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தவறானது, உண்மைக்கு புறம்பானது என சமூகநீதித் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுவரை அந்த மாணவனுக்காக ரூ 48 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதுபோல் யாருமே குறை சொல்லாத போது, பாரதிதாசன் மட்டும் குறை சொல்வது ஏன் என்றும் சமூக நீதித் துறை கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Tamil nadu student Bharathidasan from Malaysia released another emotional video.