கல்வி உதவித்தொகை கிடைத்துவிட்டது.. நெஞ்சார்ந்த நன்றி.. வீடியோ வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்!

  • சென்னை: தமிழக அரசு தரப்பில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை எனக்கு வந்துவிட்டது என்றும், இந்த நிதி வருவதற்காக எனக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி என்றும் மலேசியாவில் முனைவர் பட்டம் பயிலும் தமிழக மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    திமுக ஆட்சியின் போது அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கும் செலவுகளை தமிழக அரசே ஏற்கும். அந்த வகையில் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். இவர் கடந்த மாதமே கல்வி உதவித்தொகை தனக்கு வழங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

    Advertisement

    இதன்பின்னரும் கூட கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படவில்லை. இதனால் பாரதிதாசன் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாரதிதாசன், கல்லூரியில் இருந்து வெளியேற்றும் நிலை உருவாகி உள்ளது என்று வேதனையை பகிர்ந்தார். அதற்கு தமிழக அரசு தரப்பில், பாரதிதாசன் வெளியிட்டுள்ள வீடியோ உண்மைக்கு புறம்பானது. ஏற்கனவே அவரின் படிப்புக்கு ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.19.50 லட்சம் செலவின கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு உரிய விளக்கத்தையும், ரசீதினையும் கொடுத்துவிட்டதாக பாரதிதாசன் மீண்டும் வீடியோவில் கூறி இருந்தார்.

    Advertisement

    ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் ஈகோ மோதலாக மாறியது. அமைச்சர் வன்னி அரசு மற்றும் மாணவர் பாரதிதாசன் இடையில் ஈகோ மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று பார்க்கப்பட்டது. இப்படியான சூழலில் பாரதிதாசனின் படிப்பு செலவை ஏற்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டால், அதனை திமுகவும், தமிழக மக்களும் பார்த்து கொள்வார்கள் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

    ஸ்டாலின் அறிவித்த அடுத்த நாளிலேயே, அமைச்சர் வன்னி அரசு, பாரதிதாசன் என்னுடைய தம்பி.. அவருக்கான கல்வி உதவித்தொகை 2 நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் கல்வி உதவித்தொகை பாரதிதாசன் கைகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. இதுதொடர்பாகவும் மாணவர் பாரதிதாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அதில், அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2ஆம் ஆண்டுக்கான ஆய்வு மற்றும் அன்றாட செலவுக்கான உதவித்தொகை கிடைத்துவிட்டது. இதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. இதற்காக முயற்சித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு கீழ் வரும் ஆண்டுகளில் எந்த சிக்கலும் இல்லாமல் தமிழக அரசு அவருக்கு உதவித்தொகையை விடுவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    English Summary

    Bharathidasan: PhD Scholar Bharathidasan Thanks TN Govt After Receiving Ambedkar Overseas Scholarship Funds