இலவச பயணம் அறிவிப்பால் கேரளா அரசு பஸ்களில் நடக்க போகும் பெரிய மாற்றம்.. கடுப்பான தனியார் பேருந்துகள்

  • சென்னை: இலவச அரசு பஸ் பயணம் பெண்களுக்காக கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி புதிய அரசு அமைந்த கையோடு, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் 15 முதல் அமலாகும் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.. இதனால் தங்களுக்கு நேரிடும் வருவாய் இழப்பை தடுக்க, வழித்தட அனுமதி கட்டணத்தை குறைக்கக் கோரி முதலமைச்சரை சந்திக்க அவர்கள் திட்டுள்ளார்களாம்.

    Advertisement

    கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

    Advertisement

    தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, 'இந்திரா கேரண்டி' திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்குவதாகும்.. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பொறுப்பேற்றார்.. அவரது தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கொள்கை அளவிலான ஒப்புதல்
    வழங்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    இலவச பஸ் பயணம் பெண்களுக்கு

    புதிய அரசின் முடிவின்படி, வரும் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் இந்த இலவச பயணத் திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.. இத்திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கேரள அரசு போக்குவரத்து கழக (KSRTC) பேருந்துகள் மூலம் இந்த திட்டம் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது.. இந்த அறிவிப்பு பெண் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மாநிலத்தின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்..

    அரசு பஸ்களில் இலவசம்

    அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்குவதால், தங்களின் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.. உதிரிபாகங்களின் விலை உயர்வு மற்றும் டீசல் விலை ஏற்றம் காரணமாக ஏற்கனவே போக்குவரத்து தொழில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    Advertisement

    இதனால் தங்களின் தினசரி கலெக்ஷன் நேரடியாக பாதிக்கப்படும் என்பது அவர்களின் அச்சம்.. இதுபோக, வழித்தட அனுமதி கட்டணம் (Permit fee) உள்ளிட்ட பல்வேறு வரிகளை அரசுக்கு தொடர்ந்து செலுத்தி வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்..

    "தனியார் பேருந்துகளில் பயணிப்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் தான்.. இப்போது அவர்கள் எல்லாரும் அரசு பஸ்சை தேடிப் போயிட்டா, எங்களுக்கு கலெக்ஷன்ல பெரிய அடி விழும்.. ஏற்கனவே கர்நாடகாவில் சக்தி திட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்குள்ள தனியார் பேருந்து தொழில் முற்றிலும் நலிவடைந்துவிட்டது.. அதே நிலை இங்கும் வந்துவிடும்" என்று கேரள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தனியார் பேருந்து உரிமையாளர்கள்

    இத்திட்டத்தை அறிவிக்கும் முன்பாக தங்களை அழைத்து அரசு ஆலோசிக்கவில்லை என்பதும் அவர்களின் முக்கிய புகாராக உள்ளது.. தங்கள் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் வழித்தட அனுமதி கட்டணங்களை குறைக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பான தங்களின் கோரிக்கை மனுவை அளிப்பதற்காக முதலமைச்சர் வி.டி.சதீசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.. ஜூன் 15 முதல் திட்டம் அமலுக்கு வரவுள்ள சூழலில், தங்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து புதிய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..

    English Summary

    Free Travel In Government Buses For Women From June 15 In Kerala.. Private Bus Owners Oppose CM Decision